IPL 2021 : செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - ராஜிவ் ஷுக்லா உறுதி!
ஐபிஎல் நிறைவடைந்த சில நாட்களிலேயே டி20 உலகக்கோப்பை போட்டிகளும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஐபிஎல் சீசன் 2021 மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடையும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவர் ராஜிவ் ஷுக்லா தெரிவித்துள்ளார். IANS செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவர் ராஜிவ் ஷுக்லா "செப்டம்பர் 19-ஆம் தேதி - அக்டோபர் 15-ஆம் தேதி இடையே ஐபிஎல் போட்டி நடைபெறும்" என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ANI செய்தி நிறுவனமும் இதே கால கட்டத்தை தெரிவித்திருந்த நிலையில், அதை ராஜிவ் ஷுக்லாவும் தற்போது உறுதி செய்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும், யார் சாம்பியன் என தீர்மானிக்கும் இறுதி போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் என தெரியவந்துள்ளது.
முன்னதாக ஐபிஎல் தொடர் 29 லீக் போட்டிகள் நடைபெற்றிருந்த போது வீரர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் சிலருக்கு கொரோனா நோய் தோற்று ஏற்பட்டதன் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்படுவதாக மே 4-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 25 நாள் கால இடைவெளியில் மீதமுள்ள ஐபிஎல் தொடரின் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படும் நிலையில், ஐபிஎல் தொடர் நிறைவடைந்த கையோடு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை ஐசிசி என்று உலகக்கோப்பை போட்டிகள் துவங்கும் என்ற தேதியை வெளியிடாத நிலையில் அக்டோபர் 18-ஆம் தேதி உலகக்கோப்பை டி20 போட்டி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையும் இந்தியாவே இந்த முறை நடத்துகிறது, பெரும்பாலும் இதுவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெறும் அல்லது ஓமனில் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.
மேலும் அறிய : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்! வாங்கிக்கட்டிய 5 பரிதாபங்கள்!
அக்டோபர் 15ம் தேதி ஐபிஎல் தொடர் நிறைவடைகிறது என்றால், வெளிவரும் தகவலின் படி அடுத்த 3 நாட்களில் அக்டோபர் 18ம் தேதி போல் உலகக்கோப்பை தொடர் தொடங்கி ஆக வேண்டும். இது குறித்த இறுதி முடிவை ஜூன் 28ம் தேதிக்குள் முடிவெடுத்து ஐசிசி இடம் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்க வேண்டும்.
இது குறித்து IANS செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ள ஐசிசி "ஜூலை மாதம் டி20 உலகக்கோப்பை எங்கே நடக்கிறது, தேதிகள் அடங்கிய கால அட்டவணையை வெளியிட உள்ளோம். ஐசிசி க்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் தேவை மைதானத்தை தயார் செய்ய தேவைப்படும். இது குறித்து தொடர்ந்து ஐசிசி & பிசிசிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கும் உலககோப்பைக்கும் மிக குறைந்த கால அவகாசமே உள்ளது சிக்கலை ஏற்படுத்தாது என ராஜிவ் ஷுக்லா தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில் "முதலில் குவாலிபையர் சுற்று போட்டிகள் தான் நடைபெறுகின்றன, அதனால் ஐபிஎல் பங்குபெறும் வீரர்கள் தங்கள் அணியுடன் சேர்ந்துகொள்ள போதுமான கால அவகாசம் இருக்கும்" என்றுள்ளார். இந்நிலையில் இம்முறை உலகக்கோப்பையில் 16 அணிகள் பங்கேற்கின்றன, அதில் 6 அணிகள் டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகள்.