India Tour of Sri Lanka: பயிற்சியாளராக களமிறங்கும் ட்ராவிட்.. சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் ரசிகர்கள்
இந்திய அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 50 ஓவர் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது..
முன்னாள் இந்திய கேப்டன் தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார்.
இந்திய அணி விராட் கோஹ்லி தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதற்கு இந்திய அணியுடன் செல்லும் பயிற்சியாளர் குழுவில் ரவி சாஸ்திரி, பாரத் அருண், விக்ரம் ராத்தூர் ஆகியோர் செல்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே, மற்றொரு இந்திய அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 50 ஓவர் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்க பட இருப்பதாக பிசிசிஐ நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்..
பிசிசிஐ நிர்வாகி அளித்துள்ள தகவலின் அடிப்படையில் "இந்திய அணியின் பயிற்சியாளர் குழு இங்கிலாந்தில் இருக்கும் சமயத்தில், இளம் வீரர்களை கொண்ட அணி இலங்கை செல்ல இருக்கிறது. இதற்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செல்ல இருப்பது மிக நல்ல விஷயம், ஏற்கனவே இந்திய இளம் வீரர்கள் பலர் ராகுல் டிராவிட்டின் பார்வையின் கீழ் இருந்துள்ளது, இலங்கை தொடரின் போது இந்திய அணிக்கு கைகொடுக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது..
முன்னதே தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக ராகுல் ட்ராவிட் இந்தியாவின் 19 வயதிற்குட்பட்ட வீரர்கள் மற்றும் இந்திய ஏ அணி ஆகியவற்றிற்கு 2015ம் ஆண்டு முதல் பயிற்சியாளராக செயல்ப்பட்டு வந்தார். அவரின் பயிற்சி காலமே தற்போது இந்திய அணி மிக வலுவான இளம் வீரர்களை கொண்டு நல்ல பெஞ்ச் ஸ்ட்ரென்துடன் இருக்க காரணம் என நம்பப்படுகிறது..
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி இந்த மாத இறுதியில் தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி வீரர்கள் விராட், ரோஹித் என பலர் இங்கிலாந்தில் உள்ள நிலையில், மிகுதியான இளம் வீரர்களை கொண்ட ஒரு இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்றடைந்த பின்பு அங்கே இந்திய அணி தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் ஜூலை 13, 16, 19 ஆகிய தேதிகளில் முதலில் 3 ஒருநாள் போட்டிகளிலும், அதற்கு பின் ஜூலை 22, 24, 27 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
ஏற்கனவே 2014ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டிருந்த பொது ராகுல் டிராவிட் இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக செயல்பட்டார். 2017ம் ஆண்டு அணில் கும்ப்ளே விலகிய பொது டிராவிடை பயிற்சியாளராக பொறுப்பேற்க கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது, அப்போது டிராவிட் அதனை மறுத்திருந்தார். அதன் பின்பு தற்போது இரண்டாவது முறையாக இந்திய தேசிய அணியுடன் பயிற்சியாளராக இணைகிறார் ராகுல் டிராவிட். இதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.