Calendar Slam: டென்னிஸ் உலகின் மகுடம்.. கவுரவம் தரும் காலாண்டர் ஸ்லாம்.. இதுவரை வென்றவர்கள் யார்?
ஆஸ்திரேலிய ஓபன், ப்ரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடர்களை கைப்பற்றுவது ஒவ்வொரு டென்னிஸ் வீரரின் வாழ்நாள் கனவாகும்.
![Calendar Slam: டென்னிஸ் உலகின் மகுடம்.. கவுரவம் தரும் காலாண்டர் ஸ்லாம்.. இதுவரை வென்றவர்கள் யார்? Players Who Have Won All Four Grand Slams in a Calendar Year know full details Calendar Slam: டென்னிஸ் உலகின் மகுடம்.. கவுரவம் தரும் காலாண்டர் ஸ்லாம்.. இதுவரை வென்றவர்கள் யார்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/9437d031cc2b99b8047abdd46470beff1691052914769102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கால்பந்து, கிரிக்கெட் அளவிற்கு இணையான ரசிகர்களை கொண்ட விளையாட்டு டென்னிஸ். டென்னிஸ் விளையாட்டிலே மிகவும் பிரபலமான கிராண்டஸ்லாம் தொடர்களாக திகழ்வது ஆஸ்திரேலிய ஓபன், ப்ரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன் மற்றும் யு.எஸ். ஓபன். இந்த தொடர்கள் முறையே ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறும்.
காலாண்டர் ஸ்லாம்:
புகழ்பெற்ற இந்த தொடர்களில் உலகின் முக்கியமான டென்னிஸ் நட்சத்திரங்கள் மட்டுமே விளையாட முடியும். இந்த நான்கு தொடர்களில் ஏதேனும் ஒரு பட்டத்தை வெல்வதே மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இந்த நான்கு பட்டத்தையும் வென்ற வீரர்களின் எண்ணிக்கை மிக குறைவு ஆகும்.
டென்னிஸ் உலகில் இந்த நான்கு பட்டங்களையும் ஒரே ஆண்டில்( ஒரே காலண்டர்) ஆண்டில் வெல்வதையே காலண்டர் ஸ்லாம் என்று அழைக்கின்றனர். அதாவது, அந்தாண்டில் நடைபெற்ற மேலே கூறிய நான்கு கிராண்டஸ்லாம் பட்டங்களையும் வென்ற வீரர் என்று இதன் பொருள்.
இத்தனை ஆண்டுகால டென்னிஸ் வரலாற்றில் காலண்டர் ஸ்லாமை இதுவரை 5 பேர் மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.
டான் பட்ஜ்: (1937)
கிரிக்கெட் உலகிற்கு எவ்வாறு டான் பிராட்மேனோ அதேபோல டென்னிஸ் உலகிற்கு டான் பட்ஜ் என்று கூறலாம். டென்னிஸ் வீரர்களுக்கு முன்னோடியான இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர்தான் காலண்டர் ஸ்லாமை முதன்முறையாக கைப்பற்றியவர். 1937ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன், ப்ரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனை கைப்பற்றி அசத்தியுள்ளார். தன்னுடைய 23 வயதிலே இந்த சாதனையை படைத்த பட்ஜ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் தொடர்ச்சியாக 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஒரே வீரர் ஆவார். அவரது சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.
மாவ்ரின் பிரிங்கர்: (1953)
ஆண்களால் மட்டுமே காலண்டர் ஸ்லாம் வெல்ல முடியும் என்று இருந்தை வரலாற்றை முதன்முறையாக உடைத்தவர் மாவ்ரின் பிரிங்கர். 1950 காலகட்டங்களில் பெண்கள் டென்னிசில் கொடி கட்டிப்பறந்த அமெரிக்க வீராங்கனை இவர். 1953ம் ஆண்டு அமெரிக்க ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபனை வென்று காலண்டர் ஸ்லாம் வென்ற முதல் பெண் என்ற அரிய சாதனையை படைத்தார். காலண்டர் ஸ்லாமை வென்றபோது ப்ரிங்கருக்கு வெறும் 18 வயது மட்டுமே.
ராட் லோவர்: (1962, 1969)
டென்னிஸ் வரலாற்றின் கல்வெட்டில் எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் ராட் லோவர் என்றே சொல்லலாம். மேலே கூறிய பட்டங்களில் ஒன்றை வெல்வதே கடினமாக இருக்கும் சூழலில், காலண்டர் ஸ்லாம் வெல்வது எவ்வளவு கடினம் என்பது நமக்கு தெரியும். அப்பேற்பட்ட காலண்டர் ஸ்லாமை 2 முறை கைப்பற்றிய ஒரே வீரர் ராட் லோவர் மட்டுமே.
1962ம் ஆண்டு தன்னுடைய முதல் காலண்டர் ஸ்லாமை வென்ற ராட் லோவர் சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அதாவது 1969ம் ஆண்டு தன்னுடைய 2வது காலண்டர் ஸ்லாமை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இவர் மொத்தம் 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் காலண்டர் ஸ்லாம் பட்டத்தை வென்றது இப்போது வரை மிகப்பெரிய ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.
மார்க்ரட் கோர்ட்: (1970)
பெண்கள் டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வந்தவர் ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்ரெட் கோர்ட். காலண்டர் ஸ்லாமை தன்னுடைய 20 வயதிலே கைப்பற்றி ஒட்டுமொத்த டென்னிஸ் உலகையும் தன் பெயரை சொல்ல வைத்தவர். 1970ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபனை கைப்பற்றி காலண்டர் ஸ்லாமை வென்று அசத்தினார். இவர் ஒற்றையர் பிரிவு மட்டுமின்றி இரட்டையர்,கலப்பு இரட்டையர் பிரிவிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார்.
ஸ்டெஃபி கிராப்: (1988)
டென்னிஸ் வரலாற்றின் தற்போதைய நிலவரப்படி காலண்டர் ஸ்லாமை கைப்பற்றிய கடைசி நபர் ஸ்டஃபி கிராப்தான். டென்னிஸ் உலகின் அபாரமான வீராங்கனையான ஜெர்மனைச் சேர்ந்த ஸ்டெஃபி கிராப் 1988ம் ஆண்டு தான் ஆடிய அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் மற்றும் ப்ரெஞ்சு ஓபன்களை கைப்பற்றி காலண்டர் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமின்றி அந்தாண்டு நடந்த ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் வென்று கோல்டன் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனை என்ற வரலாறையும் படைத்தார். இந்த சாதனைகளை படைக்கும்போது அவருக்கு வெறும் 19 வயது மட்டுமே ஆகும். தன்னுடைய 30 வயதில் டென்னிஸ் உலகில் இருந்து விடைபெற்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)