Praveen Kumar Profile: விவசாய குடும்பம்...! இளம் வயதில் பதக்கம்...! பாராலிம்பிக்கில் புதிய சாதனை படைத்த பிரவீன்குமார் யார்...?
விவசாய குடும்பத்தின் பின்னணியில் இருந்த வந்த பிரவீன்குமார் இளம் வயதில் இந்தியாவிற்காக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியை காட்டிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில்தான் இந்தியா பதக்கங்களை அறுவடை செய்து வருகிறது. இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் பிரவீன்குமார் அந்த போட்டியில் வெள்ளி வென்று அசத்தினார்.
இங்கிலாந்து வீரர் ப்ரூம் எட்வர்ட்சும், போலந்து வீரர் லிபியோடோவும் கடும் நெருக்கடி அளித்த நிலையிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். மேலும், அவர் 2.07 மீட்டர் உயரம் தாண்டியது ஆசிய அளவில் புதிய சாதனை ஆகும். பிரவீன்குமார் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் ஆவார். பிரவீன்குமார் பிறக்கும்போதே காலில் குறைபாடுடன் பிறந்தவர். அதாவது அவரது ஒரு கால் மட்டும் இன்னொரு காலை காட்டிலும் உயரம் குறைவாக இருக்கும். பிறக்கும்போது காலில் குறைபாட்டுடன் இருந்தாலும் பிரவீன்குமார் சிறுவயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் தீவிர ஆர்வமாக இருந்துள்ளார்.
பிரவீன்குமார் இடது காலில் குறைபாடுகளுடன் இருந்தாலும் அவர் பள்ளிகளில் வாலிபால் ஆடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்டார். வாலிபால் ஆடும்போது அவர் நன்றாக குதிப்பதை கண்டு சிலர் அவரை உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, ஒரு முறை பள்ளியில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற பிரவீன்குமார், பின்னர் தொடர்ந்து உயரம் தாண்டுதல் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். தேசிய மாற்றுத்திறனாளிளுக்கான தடகளப் போட்டிகளுக்கான பயிற்சியாளர் சத்யபால் சிங், பிரவீனின் திறமையை கண்டுனர்ந்து அவருக்கு தீவிர பயிற்சி அளிக்கத் தொடங்கினார். பிரவீன்குமாருக்கு தகுந்த பயற்சியுடன் ஆலோசனைகளையும் வழங்கி அவரை பயிற்சியாளர் சத்யபால் சிங் கட்டமைத்தார்.
உயரம் தாண்டுதல் போட்டியில் தீவிர பயிற்சி எடுத்துக்கொண்ட பிரவீன்குமார் 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகமாற்றுத்திறனாளிகளுக்கான ஜூனியர் சாம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதுமட்டுமின்றி, பிரவீன்குமார் இந்தாண்டு நடைபெற்ற உலக பாரா தடகள பாசா கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். பிரவீன்குமார் இன்று வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோ பாராலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் மட்டும் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. உயரம் தாண்டுதல் போட்டியில் மட்டும் இந்தியா பெறும் 3வது பதக்கம் இதுவாகும்.
விவசாய குடும்பத்தின் பின்னணியல் இருந்து விளையாட்டு வீரனாக மாறியுள்ள பிரவீன்குமார், மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் உலகளவில் தரவரிசையில் பிரவீன்குமார் 2வது இடத்தில் உள்ளார். பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் மற்றுமொரு சாதனையையும் படைத்துள்ளார். 2003ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி பிறந்த பிரவீன்குமார்தான் இந்தியாவிற்காக இளம் வயதில் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இந்த சாதனையை கடந்த வாரம் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற 19 வயதே ஆன அவனி லேகாராவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார்.