Tokyo paralympics 2020: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பதக்கம். வெள்ளி வென்ற 18 வயது இளைஞர்!
பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 10 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. டி44 பிரிவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் பிரிவில் பிரவீன்குமார் பங்கேற்றார். தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற பிரவீன்குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவருடன் போலாந்து நாட்டைச் சேர்ந்த லிபியோடோ, இங்கிலாந்தின் ப்ரூம் எட்வர்ட்ஸ், பிரேசிலின் பெசெர்ரா சான்டோஸ், ஜப்பானின் சுசுகி, உஸ்பெகிஸ்தானின் கியாசோவ், வெனிசுலாவின் யூரிப் பிமென்டெல் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் இந்தியாவின் ப்ரவீன் குமாருக்கும், இங்கிலாந்தின் ப்ரூம், எட்வர்ட்ஸ் ஜோனாதனுக்கும், போலாந்தின் லிபியோட்டாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பிரேசில், ஜப்பான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா வீரர்கள் வெளியேறிய நிலையில் இவர்கள் மூன்று பேர் மட்டும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினர்.
SILVER MEDAL ALERT 🚨
— IndiaSportsHub (@IndiaSportsHub) September 3, 2021
Indian high jumper Praveen Kumar wins 🥈medal at T64 category
✨Does PB of 2.07 which is a new AR
✨Wins 🇮🇳 8th Athletics Medal at Tokyo
✨Wins 4th HJ medal at Tokyo
Congratulations & Well done#ParaAthletics pic.twitter.com/AQbhVznDCJ
2.07 மீட்டர் உயரத்திற்கான போட்டியின்போது இந்திய வீரர்களுக்கு குடைச்சல் அளித்துக் கொண்டிருந்த வீரர்களில் ஒருவரான போலந்து வீரரான லிபியோட்டோ அவருக்கான மூன்று வாய்ப்புகளையும் தவறவிட்டு வெளியேறினார். இதனால், அவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதியானது. இதையடுத்து, தங்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமாரும், இங்கிலாந்து வீரர் ப்ரூம் எட்வர்ட்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 2.10 மீட்டர் தாண்டுவதற்காக முயற்சியில் இந்திய வீரர் பிரவீன்குமார் தனக்கு அளிக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளையும் தவறவிட்டார். ஆனால், இங்கிலாந்து வீரர் ப்ரூம் எட்வர்ட்ஸ் முதல் வாய்ப்பை தவறவிட்டாலும், இரண்டாவது வாய்ப்பில் தாண்டி வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ப்ரூம் எட்வர்ட்ஸ் தங்கம் வென்றார். இந்திய வீரர் பிரவீன்குமார் ஆசிய சாதனையுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். வெள்ளி வென்ற பிரவீன்குமாருக்கு 18 வயதே ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.