Olympic Offbeat: ஜூடோ வீராங்கனை கன்னத்தில் அறைந்த கோச்: எதற்கு தெரியுமா?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ வீராங்கனையை அவருடைய பயிற்சியாளர் கன்னத்தில் அறைந்த நிகழ்வு அடங்கிய வீடியோ வைரலாகி பலரது புருவங்களையும் ஆச்சர்யத்தில் உயரச் செய்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ வீராங்கனையை அவருடைய பயிற்சியாளர் கன்னத்தில் அறைந்த நிகழ்வு அடங்கிய வீடியோ வைரலாகி பலரது புருவங்களையும் ஆச்சர்யத்தில் உயரச் செய்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா இரண்டாம் இடத்திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும், ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன.
அன்றாடம் ஒலிம்பிக் அரங்குகளில் போட்டிகளைத் தாண்டிய சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று செய்தியாகி விடுகின்றன. அந்த வரிசையில், ஜூடோ வீராங்கனையை அவருடைய பயிற்சியாளர் கன்னத்தில் அறைந்த நிகழ்வு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
அரங்கில் நடந்தது இதுதான்..
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டில் மகளிருக்கான ஜூடோ போட்டி, 63 கிலோ எடைப்பிரிவுக்கான ஆட்டத்தின்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
32வது சுற்றில் ஹங்கேரியின் ஸோஃபி ஓஸ்பாஸை எதிர்த்துக் களமிறங்கத் தயாரானார் ஜெர்மனியின் மார்டினா ட்ராஜ்டோஸ். கோதாவுக்குள் செல்லும் முன்னர் மார்டினா அவரது பயிற்சியாளர் க்ளாடியூ பூஸாவை நோக்கிச் சென்றார். பயிற்சியாளரிடம் கடைசி நேர வியூகங்களைக் கேட்டு வரப்போகிறார் என்று அனைவரும் நினைத்திருந்தனர். நிதானமாக சென்ற மார்டினா, பயிற்சியாளர் முன் விரைப்பாக நின்றார். இருவருக்குள்ளும் ஏதோ புரிதல் இருந்தது போல் இருந்தது. ஆனால், சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பயிற்சியாளர் பூஸா, போட்டியாளர் மார்டினாவைப் பிடித்து உலுக்கத் தொடங்கினார். என்ன செய்கிறார் என்று யூகிக்கும் முன்னதாக மார்டினாவின் இடது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர் மார்டினாவின் வலது கன்னத்திலும் பூஸா அறைந்தார். அங்கு நடப்பதைப் பார்த்து அரங்கு அதிர்ந்திருக்க, மார்டினா போட்டி நடைபெறும் பகுதிக்குச் சென்றார். பின்னர் அவர் போட்டியில் பங்கேற்றார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. பயிற்சியாளர், வீராங்கனையை அறைந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவகாரம் பூதாகரமானது.
இந்நிலையில், மார்டினா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் இன்று வேறு ஒரு விஷயத்துக்காக தலைப்புச் செய்தியில் வந்திருக்க வேண்டும். இது நானும் எனது பயிற்சியாளரும் பேசி வைத்து செய்த செயல். என்னை ஊக்குவிக்க எனது பயிற்சியாளர் என்னை அறைந்து என்னுள்ளே நெருப்பு பற்றி எரியச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். எனது பயிற்சியாளர் அதைத் தான் செய்துள்ளார். ஒருவேளை எனது பயிற்சியாளர் என்னை வலுவாக அடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படி அவர் அடித்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பரபரப்புகளுக்கு இடையே நடைபெற்ற மகளிருக்கான ஜூடோ போட்டி, 63 கிலோ எடைப்பிரிவில், பிரான்ஸ் வீராங்கனை கிளாரிஸ் ஆக்பெக்னோ தங்கம் வென்றார். ஸ்லோவேனியா நாட்டின் டினா வெள்ளிப் பதக்கம் வென்றார்.