விசா ரத்து நிறுத்தி வைப்பு; அரைமணி நேரத்தில் விடுவிக்க வேண்டும்: நீதிப் போராட்டத்தில் வென்ற ஜோகோவிச்
Djokovic Visa Fiasco Case: விசா ரத்துக்கு எதிரான தான் மேற்கொண்ட நீதிப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்.
விசா ரத்துக்கு எதிரான தான் மேற்கொண்ட நீதிப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்.
டென்னிஸ் உலகில் ரோஜர் ஃபெடரர்,ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் இந்த மூன்று பேர் ஆதிக்கம் செலுத்திய அளவிற்கு வேறு யாரும் செய்ததில்லை. அடுத்த மாதம் 40 வயதை எட்ட உள்ள ரோஜர் ஃபெடரர் தான் இவர்களில் மூத்தவர். இவர் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று தன்னுடைய 20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அடுத்து உள்ள ரஃபேல் நடால் தன்னுடைய 34ஆவது வயதில் 2020 பிரஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று தன்னுடைய 20 கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றார். இந்த வரிசையில் மூன்றாவதாக உள்ள நோவக் ஜோகோவிச் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கிறார். இவற்றில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் 9, பிரெஞ்சு ஓபன் 2, விம்பிள்டன் 6, யுஎஸ் ஓபன் 3. இவற்றில் ஆஸி ஓபனில் தான் அதிக கிராண்ட்ஸ்லாம்களைக் குவித்துள்ளார்.
சர்ச்சையின் வேர்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இந்த மாதம் 17ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 10வது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா சென்றார். கடந்த 5ஆம் தேதி மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். காரணம் அவரிடம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லை.
இதனாலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனும், தேசத்தின் பாதுகாப்பே முக்கியம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறினார்.
பூகம்பம் வெடித்தது:
ஆனால் இது விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், செர்பிய அரசும் இதைத் தனிப்பட்ட அவமானமாகக் கருதியது. ஜோகோவிச்சுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கூறியது. ஜோகோவிச் தடுப்பூசிக்கு எதிராக கருத்து கொண்டவர். அவர் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் தனக்கு மருத்துவ விலக்கு உள்ளதாக ஜோகோவிச் ட்வீட் செய்திருந்தார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஆஸி அரசு அவரது விசாவை ரத்து செய்தது.
நீதிப் போராட்டம்:
விசா ரத்தானதை அடுத்து, ஜோகோவிச் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆண்டனி கெல்லி, ஆஸி அரசின் விசா ரத்து முடிவை ரத்து செய்தார். ஜோகோவிச்சை அரை மணி நேரத்துக்குள் தடுப்பு மையத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சிக்கல் முடிந்ததா?
ஆனால், அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் அரசின் விசா ரத்து முடிவை ரத்து செய்தாலும் கூட அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சை நாட்டைவிட்டு திருப்பி அனுப்ப முடியும். தேவைப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை அவர் ஆஸ்திரேலியாவுக்குள்ளேயே நுழையாமல் தடுக்க இயலும் என்று கூறினார்.
மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக ஜோகோவிச் சர்ச்சை நீள்கிறது.