MS Dhoni Birthday: என்றும் தமிழ்நாட்டின் ‛தல’ மகன் தோனியின் ‛டாப் 7’ பெஸ்ட் இன்னிங்ஸ்!
கிரிக்கெட் மேதை, கிரிக்கெட் ஜாம்பவானன், கிரிக்கெட்டின் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனியின் 40வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
7.இந்தியா- வங்காளதேசம் ( 2016)
2016ம் ஆண்டு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்தியா மற்றும் வங்காளதேம் இடையே டி20 உலககோப்பை போட்டியின்போது ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி சுரேஷ் ரெய்னா ஆட்டத்தால் 146 ரன்களை குவித்தது. இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், ஒரு ஓவருக்கு 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வங்காளதேசம் வந்தது.
ஹர்திக் பாண்ட்யா வீசிய முதல் பந்தில் வங்கதேச வீரர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் முஷ்தபிஹிர் ரஹீம் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்தார். உடனே சாமர்த்தியமாக பீல்டிங்கை மாற்றியமைத்தார் தோனி. அதற்கு உடனடி பலனாக முஸ்தபீர் ரஹீம் அவுட்டாகினார். இறுதியில் ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் என்ற நிலைக்கு வங்காளதேசம் வந்தது. பாண்ட்யா வீசிய கடைசி பந்தை பேட்ஸ்மேன் அடிக்காமல் விட, பந்துவீச்சாளர் முனையில் நின்ற முஸ்தபிர் ரஹ்மான் ஒரு ரன்னை எடுப்பதற்காக பேட்டிங் முனைக்கு ஓடினார். ஆனால், அதற்குள் பந்தை லாவலகமாக பிடித்த தோனி மின்னல் வேகத்தில் அவரை ரன் அவுட் செய்தார். இதனால் திரில்லிங்காக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச ரசிகர்கள் மைதானத்திலே வேதனை தாங்காமல் அழுதனர்.
6. பாகிஸ்தானுக்கு எதிராக - 113 ரன்கள்
2012ம் ஆண்டு சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணியின் கம்பீர், சேவாக், கோலி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தோனி தனி ஆளாக போராடி தனது சதத்தின் உதவியுடன் இந்திய அணியை மீட்டார்.
இதனால், 100 ரன்களை கூட கடக்குமா என்ற நிலையில் இருந்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 227 ரன்களைச் சேர்த்தது. தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 125 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 113 ரன்களை குவித்தார். இருப்பினும் இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஆனாலும், தனி ஆளாக போராடி அணியை மீட்ட தோனிக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
5. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக - 44 ரன்கள்
2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது. 270 ரன்கள் இலக்கு என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியில் சேவாக், கோலி சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மா 33 ரன்களையும், ரெய்னா 38 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் 92 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனி மட்டுமே நம்பிக்கை தரும் விதத்தில் நின்றார். முதல் பந்தில் எதிர்முனையில் நின்ற வீரர் ஒரு ரன் தட்டிவிட, பேட்டிங் முனைக்கு வந்த தோனி மெக்கே வீசிய பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். 112 மீட்டருக்கு தோனி அடித்த அந்த சிக்ஸ்தான் தோனி அந்த இன்னிங்சில் அடித்த ஒரே சிக்ஸ். இதனால், அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
4. இலங்கைக்கு எதிராக - 45 ரன்கள்
மேற்கீந்தியதீவு நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் 2013ம் ஆண்டு மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 202 ரன்கள் இலக்கு என்று ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 58 ரன்கள் எடுத்த நிலையில் பிற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தால் தோனி மட்டும் தனி ஆளாக இலங்கை அணிக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார். கடைசி வீரருடன் ஜோடி போட்டு போராடிக்கொண்டிருந்த தோனி இரண்டு பந்துகள் மீதம் வைத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் தோனி 45 ரன்களை குவித்தார். இந்த ஆட்டத்தின் நாயகனாக தோனியே தேர்வு செய்யப்பட்டார்.
3. இலங்கைக்கு எதிராக - 183 ரன்கள்
2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை ஜெயவர்த்தனே, சங்ககரா சதத்தின் உதவியுடன் 298 ரன்களை குவித்தது. கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து, அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனி தான் சந்தித்த இரண்டாவது பந்தையே சிக்சருக்கு அனுப்பினார். பின்னர், தனது சரவெடி ஆட்டத்தின் மூலம் இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார்.
தோனியை கட்டுப்படுத்த முடியாத இலங்கை வீரர்கள் அவரது சதத்தை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. சதமடித்த பிறகும் கட்டுக்குள் வராத தோனி தனி ஆளாகவே இந்திய அணியை வெற்றி பெற வைத்துவிட்டார். இந்த போட்டியில் தோனி 183 ரன்களை குவித்தார். இப்போது வரை தோனியின் ஒருநாள் போட்டி அதிகபட்ச ரன் இதுவே ஆகும். மேலும், சர்வதேச போட்டிகளில் தற்போது வரை ஒரு விக்கெட் கீப்பர் ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன்னும் இதுவே ஆகும்.
2. பாகிஸ்தானுக்கு எதிராக - 148 ரன்கள்
2005ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கங்குலியின் பரிசோதனை முயற்சியாக ஒன் டவுன் வீரராக களமிறங்கினார் தோனி. அதுவரை யாரென்றே அறியப்படாத தோனி, தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக்கொண்டு அந்த போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார்.
88 பந்துகளில் சதம் அடித்த தோனி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்து 148 ரன்களுக்கு கடைசியில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி இந்த போட்டியில் 356 ரன்களை குவித்தது. இந்த போட்டியின் நாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.
1 . உலககோப்பை இறுதி ஆட்டம் 91 ரன்கள்
ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த இன்னிங்சாகவும், தோனியின் கேரியரில் எப்போதும் நம்பர் ஒன் இன்னிங்ஸ் இந்த போட்டிதான் என்றால் யாரும் அதை மறுக்க முடியாது. 2003க்கு பிறகு மீண்டும் இந்தியா 2011ம் ஆண்டு உலககோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பையில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை ஜெயவர்த்தனே சதத்தின் உதவியால் 274 ரன்களை குவித்தது. 275 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. சேவாக் ரன் ஏதுமின்றியும், சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த கம்பீர் மட்டும் நிதானமாக ஆடி அணியை மீட்டுக்கொண்டிருந்தார்.
கோலியும் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய 114 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. யுவராஜ்சிங் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அதிரடியாக களத்திற்குள் இறங்கினார் தோனி. இறங்கியது முதல் துரிதமாக ரன்களை சேர்த்தார் தோனி 92 ரன்களுக்கு கம்பீர் ஆட்டமிழக்க, ரன் சேகரிப்பை மேலும் துரிதப்படுத்தினார் தோனி. ஆட்டத்தின் 49வது ஓவரை நுவன் குலசேகரா வீசினார். 12 பந்துகளுக்கு 4 ரன்கள் என்று இருந்த நிலையில், குலசேகராவின் இரண்டாவது பந்தில் தோனி அடித்த சிக்ஸால் இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பையை முத்தமிட்டது. தோனி அடித்த அந்த கடைசி சிக்ஸ் இந்திய ரசிகர்களுக்கு இன்னறும், இனியும் அதுதான் எவர்கிரீன் சிக்ஸ். அந்த போட்டியில் தோனி 79 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 91 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.