Mary Kom: "தப்பா புரிஞ்சுகிட்டீங்க! நான் இன்னும் ரிட்டையர்ட் ஆகல" : மேரி கோம் சொன்னது என்ன?
தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றும், தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் விளக்கம் அளித்துள்ளார்.
ஆறு முறை உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவரும், உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்பவருமானவர் இந்தியாவின் மேரிகோம். இந்த நிலையில், இவர் நேற்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து, அவர் ஓய்வு பெற்றுவிட்டதாக அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஓய்வு பெறவில்லை:
ஆனால், சற்று முன் மேரி கோம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேரிகோம் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, “நான் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை. நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் ஓய்வை அறிவிக்கும்போது நானே அனைத்து ஊடகங்கள் முன்பும் வந்து ஓய்வை அறிவிப்பேன். சில ஊடகங்களில் நான் ஓய்வு பெற்றுவிட்டதாக வந்தது. அது உண்மை அல்ல.
திப்ருகார்க்கில் நேற்று நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நான் அங்குள்ள பள்ளி குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக எனக்கு விளையாட்டில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற பசி இன்னும் உள்ளது. ஆனால், ஒலிம்பிக்கின் வயது வரம்பு என்னை பங்கேற்க அனுமதிக்காது என்றேன். என் விளையாட்டை என்னால் தொடர முடியும். நான் இன்னும் எனது உடற்தகுதியில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் ஓய்வு பெறும்போது அனைவருக்கும் அதை தெரிவிப்பேன்”
இவ்வாறு அவர் கூறினார்.
வயது வரம்பு:
மேரி கோம் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று கூறினாலும், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் அறிவிப்பின்படி அவரால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. குத்துச்சண்டை சம்மேளனம் வீரர்கள், வீராங்கனைகள் 40 வயது வரை மட்டுமே போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. ஆனால், மேரிகோமிற்கு 41 வயதாகிறது.
இந்திய நாட்டிற்காக ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி, உலக குத்துச்சண்டை போட்டி என பல போட்டிகளில் மேரி கோம் பதக்கங்களை குவித்துள்ளார். இவரது சேவையை பாராட்டி இவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இவரது திறமையை பாராட்டி பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளும் இவருக்கு குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது.
மேரிகோம் ஓய்வு பெறவில்லை என்று அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது வரம்பு காரணமாக அவர் இந்தாண்டு பாரீசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: IND vs ENG 1st TEST: தொடங்கியது டெஸ்ட்! டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்! சுழல் தாக்குதல் நடத்துமா இந்தியா?
மேலும் படிக்க: IND vs ENG 1st Test: இன்று முதல் டெஸ்ட்! ஹைதரபாத்தில் ஆதிக்கம் செலுத்தப்போவது இந்தியாவா? இங்கிலாந்தா?