Messi Leaves Barcelona: புதிய ஒப்பந்ததிற்கு ‘நோ’, இனி பார்சிலானோ அணியில் மெஸ்ஸி இல்லை!
பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மெஸ்ஸி, அந்த அணியுடனான தனது 18 வருட உறவை கடந்த ஜூன் மாதம் முடித்து கொண்டார்.
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, இனி பார்சிலோனா அணிக்காக விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பார்சிலோனா அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021
2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மெஸ்ஸி, அந்த அணியுடனான தனது 18 வருட உறவை கடந்த ஜூன் மாதம் முடித்து கொண்டார். பார்சிலோனா அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனால், வேறொரு புதிய அணியில் அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பார்சிலோனா அணியில் அவர் தக்கவைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பார்சிலோனா அணியில் இப்போது போதுமான தொகை இன்றி இருப்பதால், 50% சம்பள பிடித்தம் என்ற விதிமுறையை ஏற்றுக்கொண்டு மெஸ்ஸி இதே அணியில் இருக்க முடிவெடுத்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பார்சிலோனா ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
👕 778 games
— 433 (@433) August 5, 2021
⚽️ 672 goals
🎯 305 assists
🏆 35 trophies
Farewell, Leo Messi. pic.twitter.com/oNHJzaGjpR
ஆனால், நேற்று வெளியான தகவலின்படி, ”மெஸ்ஸி மற்றும் பார்சிலோனா அணி தரப்பில் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட இருப்பதாக இருந்த நிலையில், அந்த நிகழ்வு நடைபெறவில்லை. லா லிகா கால்பந்து தொடர் விதிமுறைகளும், வணிக ரீதியாகவும் பார்க்கும்போது இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட முடியவில்லை. இதனால், பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி வெளியேறியுள்ளார்” என பார்சிலோனா அணி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெஸ்ஸியை கெளரவிக்கும் வகையில், மெஸ்ஸியின் ஜெர்ஸி நம்பர் ‘10’ஐ மெஸ்ஸிக்கென ஒதுக்கி வைத்துவிட வேண்டும், இனி வேறு எந்த வீரரும் பயன்படுத்த முடியாதபடி அந்த ஜெர்ஸி நம்பரை ‘லாக்’ செய்ய வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முன்னதாக, தன்னுடைய 13 வயதிலிருந்து கால்பந்து விளையாட்டில் இருக்கும் மெஸ்ஸிக்கு அர்ஜென்டினா அணிக்காக ஒரு சர்வதேச கோப்பையை வெல்ல வேண்டும் என்று நீண்ட நாள் கனவு ஒன்று இருந்தது. அந்த கனவு கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு நிறைவேறாமல் இருந்தது. லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக 10 முறை அவர் கோப்பை வென்றுள்ளார்.
Lionel Messi - End of an Era
— ً (@LSComps) August 5, 2021
The Story.pic.twitter.com/mEkSD6It8T
எனினும் தன்னுடைய சொந்த நாடான அர்ஜென்டினாவிற்கு ஒரு முறை கூட கோப்பை வெல்லவே முடியாமல் இருந்தார். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோவில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக களமிறங்கினார். அப்போது ஜெர்மனி அணியிடம் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்தது. இந்த சோகம் அவருக்கு எப்போதும் ஆறாத துயரமாக அமைந்தது.
இந்த சூழலில், இந்தாண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அர்ஜென்டினா அணிக்காக அவர் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.