HBD Sunil Gavaskar: 'சுனில் கவாஸ்கரும் டெஸ்ட் போட்டிகளும்'- தீராத காதல் பயணம் : ஹேப்பி பர்த்டே கவாஸ்கர்..!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான சுனில் கவாஸ்கர் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக லிட்டல் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவர் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர் பல அணியின் பந்துவீச்சை நொறுக்கினார். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தனது அசாத்திய பேட்டிங்கின் மூலம் ரன்களை சேர்த்தார். அத்துடன் பந்துவீச்சாளர்களை தன்னுடைய பேட்டிங்கின் மூலம் திணறடித்தார்.
சுனில் கவாஸ்கரும் டெஸ்ட் போட்டிகளும்:
1971ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் களமிறங்கினார். அந்த முதல் தொடரிலேயே பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். தன்னுடைய முதல் டெஸ்ட் தொடரிலேயே 774 ரன்கள் சேர்த்து சாதனைப் படைத்தார். இந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் இரட்டை சதம் என்று வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தார். அப்போது இவரை உலகம் வியந்து பார்த்தது.
அதன்பின்னர் இவருடைய ரன் வேட்டை மற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராக தொடர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் படைத்தார். அத்துடன் மும்பை வான்கடே மைதானம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானம் ஆகிய இரண்டிலும் தொடர்ச்சியாக 4 சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார். இவை தவிர டெஸ்ட் போட்டிகளில் 18 வீரர்களுடன் ஜோடியாக 58 சதம் பார்ட்னர்ஷிப் அடித்த ஒரே வீரர் கவாஸ்கர் தான். பேட்டிங் மட்டுமல்ல ஃபில்டிங்கிலும் கவாஸ்கர் சிறந்து விளங்கினார். டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் அல்லாமல் 100 கேட்ச்கள் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் கவாஸ்கர் பெற்றார்.
1983ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 127 ரன்கள் விலாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
மொத்தமாக இந்திய அணிக்காக 125 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய கவாஸ்கர் 34 சதம் மற்றும் 45 அரைசதங்கள் உதவியுடன் 10,122 ரன்கள் குவித்தார். இவருடைய பல சாதனைகளை மற்றொரு மும்பை வீரரான சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார். சச்சின் வந்த பிறகு அவர் தான் இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்று புகழப்பட்டார். ஆனால் அவருக்கும் முன்பாக ஹெல்மெட் சரியாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படாத காலத்தில் கவாஸ்கர் சிறந்து விளங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை வென்ற போது அந்த அணியில் கவாஸ்கர் இடம்பெற்று இருந்தார். 1987ஆம் ஆண்டு தன்னுடைய ஓய்விற்கு பிறகு வர்ணனையாளராக தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை தொடர்ந்து கொண்டு வருகிறார். இன்று 72ஆவது பிறந்தநாள் கொண்டாடும் இவர் மேலும் பல ஆண்டுகள் வாழ நாம் அனைவரும் வாழ்த்துவோம்.
மேலும் படிக்க:அணி அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று, ஒத்திவைக்கப்படுமா இந்தியா vs இலங்கை போட்டிகள்?