FIDE Grand Prix: ’சென்னையில் ஒலிம்பியாட்டில் நல்ல நினைவுகள், ஆனா டெல்லியில்..’ செஸ் தொடரில் வெளியேறிய கஜகஸ்தான் வீராங்கனை!
கஜகஸ்தான் நாட்டு செஸ் வீராங்கனை ஸன்சயா அப்துமாலிக், டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்காமல் விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
கஜகஸ்தான் நாட்டு செஸ் வீராங்கனை ஸன்சயா அப்துமாலிக், டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்காமல் விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியில் சர்வதேச செஸ் அமைப்பு (FIDE) நடத்தும் பெண்களுக்கான கிராண்ட் ப்ரீ 2022-2023 போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஸன்சயா அப்துல்மாலிக்கும் கலந்து கொள்வதாக இருந்தது. கஜகஸ்தான் நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டரான இவர் கிராண்ட் பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக டெல்லி வருகை தந்தார். அவருக்கு சரியான முறையில் வரவேற்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டு வெளியேறியதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Kazakh no.1 Zhansaya Abdumalik shares her reason for withdrawing from the @FIDE_chess Grand Prix 2022-23 happening in New Delhi.
— ChessBase India (@ChessbaseIndia) March 26, 2023
Read the full article: https://t.co/nTHv9roQUZ pic.twitter.com/dguzxB7dxl
இதனையடுத்து தொடரில் பங்கேற்காமல் வெளியேறியது குறித்து செஸ் வீராங்கனை ஸன்சயா அப்துமாலிக் விளக்கம் அளித்துள்ளார். இதனை செஸ்பேஸ் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், “இத்தொடருக்கு செய்திருந்த ஏற்பாடுகள் சரியாக இல்லாததால் நான் இந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்டேன். நான் ஏர்போர்ட்டிற்கு இரவு 1.30 மணிக்கு வந்து சேர்ந்தேன். ஆனால், அவர்கள் என்னை சந்திக்க மறந்துவிட்டார்கள். எனக்காக யார் காத்திருக்க வேண்டுமோ அவரை தொடர்புகொள்ள நான் முயற்சி செய்தேன். ஆனால் அவர் ஒன்றரை மணி நேரமாக மெசேஜ்களை படிக்கவே இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று மெயிலில் அவர்கள் சொன்ன அனைத்தையும் செய்திருந்தோம். ஆனால் விமான நிலையத்தில் எதுவுமே இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய சென்னை ஒலிம்பியாட்டில் ஆயிரம் பேரை ஒன்று சேர்க்க முடிந்தவர்களால் 12 பேரை ஒன்று சேர்ப்பது கடினமில்லை என்று நினைக்கிறேன். ஒரு முன்னணி ஆண் வீரர் தொடருக்காக வரும்போது அவரை அழைத்துச் செல்ல ஒருவருமே வரவில்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அது ஒரு நல்ல தொடக்கம் கிடையாது.
மேலும், ஹோட்டல் அமைந்திருந்த இடமும் நன்றாக இல்லை. டெல்லியில் மாசுபாடு காரணமாக காற்றில் பிரச்சனை இருக்கிறது என்று செஸ் அமைப்புக்குத் தெரியும். ஹோட்டலுக்கு வெளியே எப்போதும் எதையாவது எரித்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். ஹோட்டலை விட்டு வெளியே வருவதும் கடினமானது. ஹோட்டலை விட்டு வெளியே செல்லாதீர்கள் அது ஆபத்தானது என்று ஹோட்டல் பணியாளர் என்னிடம் கூறினார். நான் இந்தியாவை நேசிக்கிறேன். சென்னையில் ஒலிம்பியாட் எங்களுக்குக் கிடைத்தது. அத்தொடரில் எங்களுக்கு நல்ல நினைவுகள் இருக்கின்றன. ஆனால் இந்த முறை ஏதோ தவறாகிவிட்டது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருந்து விளையாட வேண்டும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இது உலகில் மிகச்சிறந்தத் தொடரில் ஒன்று. பெண்கள் செஸ் போட்டியிலும் செஸ் அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது எனக்கு மிகவும் அதிகமாகப் பட்டது அதனால் தான் கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தேன். நாங்கள் நல்ல சூழ்நிலையில் விளையாட தகுதியானவர்கள். நான் சிறந்த போராளி என்பதும் நான் இதுபோன்ற தொடரில் இருந்து காரணம் இல்லாமல் வெளியேறமாட்டேன் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று அவர் கூறியுள்ளார்.