July Born Cricketers | இது பர்த்டே மாதம்.. ஜூலையில் பிறந்த கிரிக்கெட் சாம்பியன்கள் இவங்கதான்..!
12 மாதங்களில் ஜூலை மாதம் மட்டும் இந்திய கிரிக்கெட்டுக்கு ஸ்பெஷல்.
இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியமைத்த முன்னாள் கேப்டன்கள் மற்றும் லெஜண்டுகளான சவ்ரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி மற்றும் சுனில் கவாஸ்கர் இந்த ஜூலை மாதத்திலே பிறந்துள்ளனர். இவர்கள் தவிர சுழற்பந்துவீச்சில் சாதனை படைத்த ஹர்பஜன்சிங், வேகப்பந்து வீச்சாளர் முனாப்படேல், இந்திய மகளிர் அணியின் முக்கிய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஆகியோரும் ஜூலையிலே பிறந்துள்ளனர்.
ஹர்பஜன் சிங்:
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான ஹர்பஜன் சிங் கடந்த 1980ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி பிறந்தார். 90-களின் பிற்பகுதியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை ஒற்றை ஆளாக அனில் கும்ப்ளே மட்டும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு துணையாக அணிக்குள் அழைத்துவரப்பட்டவர்தான் ஹர்பஜன்சிங். அனில் கும்ப்ளேவிற்கு துணையாக இருந்து, அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளராக பொறுப்பு வகித்த ஹர்பஜன்சிங் 1998ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகியது முதல் 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவற்றில் மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1998ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமான ஹர்பஜன்சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவற்றில் 25 முறைக்கு மேல் 5 விக்கெட்டுகளையும், 5 முறைக்கு மேல் 10 விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். சுழற்பந்து வீச்சாளராக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் இந்திய அணிக்கு பல முறை கைகொடுத்துள்ளார் டெஸ்ட் போட்டிகளில் 9 முறை அரைசதம் அடித்த ஹர்பஜன்சிங், டெஸ்டில் சதமடித்து தனது அதிகபட்ச ஸ்கோராக 115 ரன்களையும் குவித்துள்ளார். ஐ.பி.எல், போட்டியில்கூட தனது காட்டடி மூலமாக ஒரே போட்டியில் 64 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். முன் கோபக்காரராக இருந்தாலும் முன்னாள் கேப்டன் கங்குலியின் மனதிற்கு மிகவும் பிடித்த வீரராக ஹர்பஜன்சிங் வலம் வந்தார். கடைசியாக ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஹர்பஜன்சிங் தற்போது ப்ரண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
எம்.எஸ்.தோனி
உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பரிச்சயமான பெயர்களில் நிச்சயம் தோனியும் ஒன்று. 20 ஓவர், 50 ஓவர், மினி உலககோப்பை என்று மூன்று வடிவிலான கிரிக்கெட் கோப்பையையும் வென்று தந்தவர். ஐ.பி.எல். போட்டிகளிலும் மூன்று முறை கோப்பையை வென்றவர். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலே யாருமே வர முடியாத அளவிற்கு வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி. 1981ம் ஆண்டு ராஞ்சியில் பிறந்தவர் எம்.எஸ்.தோனி. 2004ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான தோனி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த 148 ரன்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்தது. மீண்டும் இலங்கைக்கு எதிராக அதே பாணியில் ஒரு 183 ரன்கள். 2007 உலககோப்பை தோல்விக்கு பிறகு மூத்த வீரர்கள் ஒதுங்கிக்கொள்ள தோனி தலைமையில் இளம் இந்திய படை முதல் டி20 உலகக்கோப்பை தொடருக்கு சென்றது.
பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டியில் தோற்கடித்து தலைசிறந்த கேப்டனாக தன்னை வெளிகாட்டினார். பின்னர், 2011-ஆம் ஆண்டு சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பையை வென்று இந்திய அணியில் கால் நூற்றாண்டு உலக கோப்பை தாகத்தை தீர்த்து வைத்தார். குறிப்பாக, இறுதிப்போட்டியில் 79 பந்துகளில் தோனி அடித்த 91 ரன்கள் கிரிக்கெட் போட்டியின் மறக்க முடியாத தருணங்களின் மணிமகுடம். அதுவும் தோனி அடித்த அந்த கடைசி சிக்சரை கிரிக்கெட்டை நேசிக்கும் எந்த ரசிகர்களாலும் மறக்கவே முடியாது. கோல்டன் மொமன்ட் ஆப் இந்தியன் கிரிக்கெட் ஹிஸ்டரி என்றே அந்த தருணத்தை அழைக்கலாம். பல்வேறு சாதனைகளைப் படைத்த தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 876 ரன்களும், 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 773 ரன்களும் 98 டி20 போட்டிகளில் ஆடி 1,617 ரன்களும், 211 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 669 ரன்களும் குவித்துள்ளார்
சவ்ரவ் கங்குலி
இந்திய அணி 90களில் சச்சின் டெண்டுல்கரை மட்டும் நம்பியிருந்த காலகட்டத்தில், அணியை தாங்கிப்பிடிக்க தன்னாலும் முடியும் என்று அணிக்குள் நுழைந்தவர்தான் சவ்ரவ் கங்குலி. இந்திய அணிக்குள் மிதவேகப் பந்துவீச்சாளராக அறிமுகமாகி, தனது திறமையான பேட்டிங்கால் தொடக்க ஆட்டக்காரராக இடம்பிடித்தாா். சூதாட்ட புகார்கள். சச்சின் டெண்டுல்கர் கேப்டன்சியை வேண்டாம் என்று கூறியது என்று இந்திய அணி மிகவும் இக்கட்டான நேரத்தில் இருந்த தருணத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை துணிச்சலுடன் ஏற்றார் சவ்ரவ் கங்குலி.
தோனி, விராட் கோலி என கேப்டன் பொறுப்பில் சாதித்த மற்றும் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் கங்குலிதான் உந்துசக்தி. சச்சின் டெண்டுல்கரை மட்டுமே நம்பியுள்ளது இந்திய அணி என்ற வார்த்தையை உடைத்தெறிந்தவர் கங்குலி. 1972ம் ஆண்டு ஜூலை 8-ந் தேதி பிறந்த கங்குலி, ஆக்ரோஷத்திற்கும், துணிச்சலுக்கும் மிகவும் பொறுத்தமானவர். 1992ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான கங்குலி 311 ஒருநாள் போட்டிகளில் ஆடி 22 சதங்களுடன் 11 ஆயிரத்து 363 ரன்களை குவித்துள்ளார். 1996ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் 113 போட்டிகளில் அறிமுகமாகி 7 ஆயிரத்து 212 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 16 சதங்கள் அடங்கும். 59 ஐ.பி.எல். ஆட்டங்களில் ஆடி 1,349 ரன்களை குவித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் அமர்ந்து டி சர்ட்டை கழற்றி சுழற்றி பிளின்டாபிற்கு கங்குலி தந்த பதிலடி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரிவெஞ்சுகளில் எப்போதுமே நம்பர் 1 தான். இடது கை அதிரடி ஆட்டக்காரரான கங்குலியின் சிக்ஸருக்கென்றே பலரும் அவரது பேட்டிங்கை ரசிப்பார்கள். வெளிநாடுகளிலும் இந்திய அணியால் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கித் தந்த கங்குலி, மினி உலக கோப்பையை முதன்முதலில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மேலும், 2003ம் ஆண்டு இந்திய அணியை உலககோப்பை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர்.
சுனில் கவாஸ்கர்:
1949ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி மும்பையில் பிறந்த சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் தூணாக நின்றவர். சச்சின் டெண்டுல்கருக்கு முன்பு இந்திய அணியை தனி ஆளாக போராடி மீட்கும் வல்லமையும் விளையாடிய வீரர் கவாஸ்கர். பவர்ப்ளேக்கள், வண்ண சீருடைகள் இல்லாத காலங்களில் விளையாடிய கவாஸ்கர் 125 டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரத்து 122 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பாக முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை குவித்தவர் என்ற பெருமைக்கு கவாஸ்கரே சொந்தக்காரர்.
அவற்றில் 34 சதங்களும், 4 இரட்டை சதங்களும், 45 அரைசதங்களும் அடங்கும். மேலும், 108 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 27 அரைசதத்துடன் 3 ஆயிரத்து 92 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் உள்பட இந்திய ஜாம்பவன்களுக்கு சிறந்த ஆலோசகராகவும் கவாஸ்கர் விளங்கினார்.
சுனில் கவாஸ்கர், கங்குலி, தோனி, ஹர்பஜன் சிங் ஆகிய ஜாம்பவன்களுடன் ஸ்மிரிதி மந்தனா, முனாப் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், மூத்த வீரர் ரோஜர் பின்னி, இஷான்கிஷான், சஞ்சய் மஞ்ரேக்கர், வெங்கடபதி ராஜூ, சேத்தன் சவுகான், நமன் ஓஜா உள்பட பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஜூலையில் பிறந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரை பல காளைகளை தந்த ஜூலை மாதம் தனித்துவம் வாய்ந்தது.