Japan Open 2022: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்திய பிரணாய்...!
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக்-சிராக் இணை வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் மட்டும் காலிறுதி வரை முன்னேறி இருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் தொடங்கி நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரணாய் ஹாங்காங் வீரர் லாங் அங்கஸ் உடன் விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர். இந்தச் சூழலில் 11-10 என்ற கணக்கில் இந்திய வீரர் பிரணாய் முன்னிலை பெற்று இருந்தார். அப்போது ஹாங்காங் வீரருக்கு காயம் ஏற்பட்டது.
🇮🇳 @PRANNOYHSPRI enters pre-quarters on day 1️⃣ at the #JapanOpen2022 ✅#BWFWorldTour#IndiaontheRise#Badminton pic.twitter.com/Cai3hwoD37
— BAI Media (@BAI_Media) August 30, 2022
உலக தரவரிசையில் 12வது இடத்தில் இருக்கும் லாங் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பாதியிலிருந்து வெளியேறினார். இதனால் இந்திய வீரர் பிரணாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பிரணாய் நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பட் மற்றும் ஷிகா கவுதம் இணை இன்று முதல் சுற்று போட்டியில் களமிறங்கியது. முதல் சுற்றுப் போட்டியில் இந்திய இணை தென்கொரியாவின் ஹானா-லீ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கேமில் இந்திய ஜோடி சிறப்பாக விளையாடியது. எனினும் அந்த கேமின் பிற்பாதியில் தென்கொரியா ஜோடி 21-15 என்ற கணக்கில் வென்றது. அதற்கு நடைபெற்ற இரண்டாவது கேமில் தென்கொரியா ஜோடி அதிரடியாக புள்ளிகளை எடுக்க தொடங்கியது. இதனால் அந்த கேமை 21-9 என்ற கணக்கில் கொரிய இணை வென்றது. அத்துடன் 21-15,21-9 என்ற கணக்கில் தென்கொரியா இணை இந்தியாவின் அஸ்வினி மற்றும் ஷிகா கவுதம் ஜோடியை தோற்கடித்தது. இதன்காரணமாக இந்திய ஜோடி முதல் சுற்றுடன் வெளியேறியது.
நாளை நடைபெற உள்ள மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை எதிர்த்து விளையாட உள்ளார். உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அகேன் யமாகுச்சியை எதிர்த்து சாய்னா நேவால் விளையாட உள்ளதால் இந்தப் போட்டி அவருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் ஜப்பான் வீரர் கெண்டோ நிஷிமோட்டோவை எதிர்த்து விளையாட உள்ளார். அதேபோல் மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் மலேசியாவைச் சேர்ந்த 5ம் நிலை வீரரான லீயை எதிர்த்து விளையாட உள்ளார்.
மேலும் படிக்க: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இனி இந்த சேனலில் மட்டும்தான் பார்க்கமுடியும்..