பூமோவின் ப்ரேஸ்...ராயின் பெனால்டி கிக்..லிஸ்டனின் லாவகம்...கேரளாவை புரட்டிப்போட்ட ATK புயல்!
வழக்கம்போல இந்த சீசனிலும் கோச்சை மாற்றி வீரர்களை மாற்றி புதிய செட் அப்போடு வந்திருந்தனர். ATK வழக்கம்போல வலுவான அணியாகவே இருந்தது. இதனாலயே இந்த போட்டியை ATK எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ISL - இந்தியன் சூப்பர் லீக் சீசன் 8 கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியிலேயே ATK மோஹன் பஹன் அணியும் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியும் மோதியிருந்தன. இரண்டு அணிகளுக்கும் இடையேயான ரைவல்ரி எப்போதுமே எதிர்பார்ப்புமிக்கதாக இருக்கும். ஏனெனில் இதற்கு முன் 2014, 2016, 2019 என மூன்று சீசன்களில் ATK கோப்பையை வென்றிருக்கிறது. இந்த மூன்றில் 2014, 2016 இரண்டிலுமே கேரளாவை வீழ்த்தியே ATK கோப்பையை வென்றிருந்தது. ஒரு காலத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறும் அளவுக்கு தரமான அணியாக இரந்திருந்தாலும் இப்போது ரொம்பவே சுமாராக ஆடக்கூடிய அணியாகவே கேரளா இருக்கிறது. கடந்த சீசனில் 10 வது இடத்தையே பிடித்தனர். வழக்கம்போல இந்த சீசனிலும் கோச்சை மாற்றி வீரர்களை மாற்றி புதிய செட் அப்போடு வந்திருந்தனர். அதேநேரத்தில், ATK வழக்கம்போல வலுவான அணியாகவே இருந்தது. இதனாலயே இந்த போட்டியை ATK எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததை போலவே வலுவான ATK அணியே 4-2 என போட்டியை வென்றிருக்கிறது.
தொடக்கத்திலேயே ATK ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. மூன்றாவது நிமிடத்திலேயே அணியின் புதுவரவான பூமோ சிரமமேயின்றி லாவகமாக ஒரு கோலை அடித்திருந்தார். கடந்த சீசனில் மும்பை சிட்டிக்காக ஆடியிருந்த பூமோவை இந்த சீசனுக்காக பெரிய தொகை கொடுத்து அள்ளி வந்ததற்கான பலனை ATK மூன்றாவது நிமிடத்திலேயே பெற்றது.
ATK ஆரம்பத்திலேயே ஸ்கோர் செய்ய தொடங்கினாலும் பந்து பெரும்பாலான நேரங்களில் கேரளா ப்ளாஸ்டர்ஸிடமே இருந்தது. கார்னர், ஃப்ரீ கிக் என கோல் அடிப்பதற்கான செட் பீஸ் வாய்ப்புகளும் அடிக்கடி கிடைத்தது. ஆனால், அதை கேரள வீரர்களால் சரியாக ஃபினிஷ் செய்து கோலாக மாற்ற முடியவில்லை.
திடீரென சர்ப்ரைஸாக 24 வது நிமிடத்தில் கேரளாவின் சஹல் Chest tap செய்து அட்டகாசமாக ஒரு கோலை அடித்தார். 1-1 என போட்டி சமநிலையில் இருந்தது. இந்த மொமண்டமை பயன்படுத்தி கேரளா முன்னேற நினப்பதற்குள்ளேயே ATK அடுத்த அதிர்ச்சி கொடுத்தது.
27 வது நிமிடத்திலேயே ATK வின் ராய் கிருஷ்ணா ஒரு பெனால்டி வாய்ப்பை பெற்று அதை கோலாகவும் மாற்றிவிட்டார். 39 வது நிமிடத்தில் பூமோ அழகாக ட்ரிப்பிள் செய்து கேரளாவின் நிலைக்குலைந்த தடுப்பு அரண்களை உடைத்து வலைக்குள் மீண்டும் பந்தை தள்ளினார். ATK க்காக முதல் போட்டியிலேயே Brace!
முதல் பாதி இப்படியாக 3-1 என முடிய, இரண்டாம் பாதியின் தொடக்கத்திலும் உற்சாகமாக ஆரம்பித்தது ATK. 50 வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா பாஸ் செய்து கொடுத்த ஒரு பந்தை லாவகமாக ஃபினிஷ் செய்து லிஸ்டன் கலாசோ கோலாக்கினார். போட்டி 4-1 என முழுக்க முழுக்க ATK வின் கைக்கு வந்தது. ATK அடித்த நான்கு கோல்களில் லிஸ்டன் கலாசோ அடித்த கோல் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் பூமோ, ராய் கிருஷ்ணா, கலாசோ என நேற்றைய போட்டியின் கோல் ஸ்கோரர்கள் மூவரின் பங்களிப்பும் இருந்தது.
69 வது நிமிடத்தில் டியாஸ் ஒரு கோலை அடிக்க கேரளா 4-2 என கொஞ்சம் முன்னேறியது. ஆனாலும், அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ATK இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது.
கேரளா ப்ளாஸ்டர்ஸ் தொடர்ந்து Ball Possession இல் ஆதிக்கம் செலுத்தினாலும் பாக்ஸுக்குள் சரியாக ஃபினிஷ் செய்து அவர்களால் கோல் அடிக்கவே முடியவில்லை. ரொம்பவே சுமாரான அட்டாக், டிஃபன்ஸ், கோல் கீப்பிங் ஆகியவற்றால் போட்டியை கோட்டைவிட்டனர்.
அதேநேரத்தில், ATK வின் பக்கம் பந்து கொஞ்சமே இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கோல்களை ஸ்கோர் செய்திருந்தனர். இந்த போட்டிக்கு முன்பான பேட்டியில் அணியின் பயிற்சியாளரான ஹபாஸ் 'ஒரு 90 நிமிடங்களுக்கும் அட்டாக் செய்து கொண்டோ அல்லது டிஃபன்ஸ் மட்டுமே செய்து கொண்டோ ஒரே கேரக்டரோடு ஆட முடியாது. பந்து எப்போதெல்லாம் நம்மிடம் இல்லையோ அப்போதெல்லாம் நாம் மூர்க்கமாக டிஃபண்ட் செய்ய வேண்டும். பந்து எப்போதெல்லாம் நம்மிடம் இருக்கிறதோ அப்போதெல்லாம் மூர்க்கமாக அட்டாக் செய்ய வேண்டும்' என பேசியிருப்பார். ATK வின் சக்ஸஸ் ஃபார்முலா இதுதான்!