UPW-W vs GG-W, Match Highlights: புரட்டி எடுத்த மெக்ராத், கிரேஸ் ஜோடி...த்ரில் போட்டியில் உத்தர பிரதேச அணி வெற்றி..ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி..!
சோஃபி எக்லெஸ்டோன், இக்கட்டான நேரத்தில் ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதனால், மூன்று விக்கெட் வித்தியாசத்தில் உத்தர பிரதேச அணி வெற்றிபெற்றது.
ஐ.பி.எல். தொடருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, அதே பாணியில் மகளிருக்கான டபிள்யூபிஎல் தொடங்கப்பட்டது. மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சுற்றுக்கு மும்பை அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. அடுத்த சுற்றுக்கு செல்ல இன்னும் இரண்டு அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளன.
முக்கிய போட்டி:
அந்த வகையில், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ள உத்தர பிரதேச அணியை இன்று நடைபெற்ற போட்டியில் எதிர்கொண்டதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது.
குஜராத் அணியில் ஹர்லீன் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா என சிறந்த வீராங்கனைகள் இருப்பதால் இந்த போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி சுற்றுக்கு போக முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
அலிசா ஹீலி, தேவிகா வைத்யா, கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி சர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன் ஆகிய வீரர்கள் உத்தர பிரதேச அணியில் இடம்பெற்றதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்பட்டது. அதற்கு ஏற்றார் போல, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியின் முதல் பாதி சிறப்பாகவே அமைந்தது.
சிறப்பாக பேட்டிங் செய்த குஜராத்:
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சோபியா டங்லி, லாரா வோல்வார்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் சொற்ப ரன்களுக்கு இருவரும் வெளியேறினர். இதையடுத்து, களம் இறங்கிய ஹர்லீன் தியோல் 4 ரன்களுக்கு அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஹேமலதா, ஆஷ்லி கார்ட்னெர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஹேமலதா, 33 பந்துகளில் 57 ரன்களையும் ஆஷ்லி கார்ட்னெர், 39 பந்துகளில் 60 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை குஜராத் அணி எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய உத்தர பிரதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்கமே அதிர்ச்சி:
தொடக்க வீரர்களான தேவிகா வைத்யா, அலிசா ஹீலி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினர். கிரண், 4 ரன்களுக்கு அவுட்டான நிலையில், போட்டி குஜராத்திற்கு சாதகமாக சென்றது. ஆனால், பின்னர் களமிறங்கிய தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி, குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுக்க, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஆனால், பரபரப்பான கட்டத்தில், இவர்கள் தங்கள் விக்கெட்டை பறி கொடுக்க போட்டியில் பரபரப்பு ஒட்டி கொண்டது. இருப்பினும், சோஃபி எக்லெஸ்டோன், இக்கட்டான நேரத்தில் ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இதனால், மூன்று விக்கெட் வித்தியாசத்தில் உத்தர பிரதேச அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், உ.பி. அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.