DC-W vs RCB-W: பெங்களூரை துவம்சம் செய்த டெல்லி.! ஷெபாலி, லேனிங் அதிரடியால் 224 ரன்கள் டார்கெட்..!
WPL 2023: ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, மகளிருக்கான டி-20 பிரிமியர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் மகளிர் பிரிமியர் லீக்கில் மொத்தம் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் (MI), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), டெல்லி கேபிடல்ஸ் (DC), UP வாரியர்ஸ் (WPW) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (GG).
தொடரின் முதல் போட்டி தொடக்க விழாவுடன் மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில், மும்பை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி அணி அதிரடி:
இந்நிலையில், தொடரின் இரண்டாவது நாளான இன்று, மகளிருக்கான பிரிமீயர் லீக் தொடரில் 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் மும்பையில் உள்ள பிரபோர்ன்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. அதில், ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஷெபாலி வர்மா மற்றும் கேப்டன் மேக் லேனிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை நாலா புறமும் சிதறடித்தனர். 14 ஃபோர்களை பறக்கவிட்ட லேனிங், 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
சதத்தை தவறவிட்ட ஷெபாலி:
அதேபோல, மறுமுனையில் பட்டையை கிளப்பிய ஷெபாலி வர்மா, 4 சிக்சர்களும் 10 ஃபோர்களும் அடித்து பெங்களூரு அணியை திணறடித்தார். இருப்பினும், சதத்தை தவறவிட்ட ஷெபாலி 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து களத்தில் இறங்கிய மரிசான் கேப், 17 பந்துகளில் 39 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு டெல்லி 223 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களம் இறங்கியுள்ளது பெங்களூரு.
பெங்களூரு அணியின் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ஹீதர் நைட், ரிச்சா கோஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளதால் போட்டியின் இரண்டாவது பாதியிலும் பரபரப்பு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது ஆட்டம்:
இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் தொடங்கும் போட்டியில் உத்தரப்பிரதேசம் - குஜராத் அணிகள் மோதுகின்றது.
உத்தரப்பிரதேச அணியை பொறுத்தவரை கேப்டன் அலிசா ஹீலி, துணை கேப்டன் தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரி, சோபி எக்லெஸ்டன், ஷப்னிம் இஸ்மாயில், தாலியா மெக்ராத், ராஜேஸ்வரி கெய்க்வாட், உள்ளிட்டோர் சிறந்த பார்மில் உள்ளனர்.
அதேசமயம் குஜராத் அணியில் கேப்டன் பெத் மூனி, ஹர்லீங் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா என சிறந்த வீராங்கனைகள் இருப்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்விரு போட்டிகளும் ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகின்றது.