Womens IPL GG Vs MI: காஞ்சனாவாக மாறிய ஹர்மன்பிரீத்..! அலறவிட்ட அமெலியா..! 208 ரன்களை எட்டுமா குஜராத்?
மும்பை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஹேலி மேத்யூஸ், பந்துகளை நாலா புறமும் பறக்கவிட்டார்.
ஐபிஎல் தொடருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, மகளிருக்கான டி-20 பிரிமியர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் மகளிர் பிரிமியர் லீக்கில் மொத்தம் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் (MI), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), டெல்லி கேபிடல்ஸ் (DC), UP வாரியர்ஸ் (WPW) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (GG).
தொடரின் முதல் போட்டி தொடக்க விழாவுடன் மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
முதல் ஆட்டமே அதகளம்:
இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அந்த அணியின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில், முதல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கி அதிரடியாக ஆடியது மும்பை அணி. தொடக்க வீரராக களமிறங்கிய ஹேலி மேத்யூஸ், பந்துகளை நாலா புறமும் பறக்கவிட்டார்.
மூன்று ஃபோர்கள், நான்கு சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்திருந்த நிலையில், அவர் அவுட் ஆனார். இதை தொடர்ந்து, களமிறங்கிய நாட் ஸ்கிவர்-பிரண்ட் 23 ரன்களில் வெளியேறினார்.
பந்தாடிய ஹர்மன்பிரீத்:
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 30 பந்துகளில் 65 ரன்களை அடித்து குஜராத் அணியை பந்தாடினார்.பின்னர், ஸ்னே ரானா வீசிய பந்தில் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினார். அவருடன் பார்டனர்ஷிப் சேர்ந்த அமெலியா கெரும் தன்னுடை பங்கிற்கு பந்துகளை விரட்டி அடித்தார். இறுதிவரை, ஆட்டம் இழக்காத அவர் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை மும்பை அணி எடுத்துள்ளது. இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கியுள்ளது குஜராத்.
மற்ற அணிகளின் விவரம்:
இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி மகளிர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய மகளிர் அணியின் வெற்றிகரமான கேப்டன் என புகழப்படும் மெக் லானிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தவுள்ளார். அதேபோல் பெத் மூனி குஜராத் ஜெயண்ட்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் யு.பி வாரியரஸ் அணிக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அலிசா ஹீலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் பிரிமியர் லீக்கின் இறுதிப் போட்டி மார்ச் மாதத்தின் 26வது நாளில் இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய தொடக்க விழாவில் மகளிர் பிரிமியர் லீக்கிற்கான தீம் பாடலை பாடகர் சங்கர் மகாதேவன் பாடி அசத்தினார்.
மேலும், பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் மகளிர் பிரீமியர் லீக் தொடக்க விழாவில் ராப்பரும் பாடகியுமான ஏபி தில்லானுடன் இணைந்து பாடுனார்கள்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி மற்ற பிசிசிஐ நிர்வாகிகளும் மகாராஸ்ட்ரா முக்கிய அரசியல் தலைவர்களும் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்கள். இதன் தொடக்க விழா மற்றும் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஹாட்ஸ்டாரில் லைவ்வாக ஸ்டீரிம் செய்யப்படுகிறது.