Kohli Fined: அடப்பாவிங்களா, சந்தோஷமா இருந்தது ஒரு குத்தமா?.. கோலிக்கு ஊதியத்தில் 10% அபராதம் விதித்த பிசிசிஐ
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் கோலிக்கு, நடத்தை விதிகளை மீறியதாக பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் கோலிக்கு, நடத்தை விதிகளை மீறியதாக பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில், விதிமுறைகளை மீறி கோலி செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதித்த பிசிசிஐ:
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதால் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு, ஒரு போட்டிக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறி, லெவல் ஒன் அளவிலான தவறை கோலி செய்ததாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கோலி செய்த தவறு என்ன என்பது தொடர்பான விரிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை.
காரணம் என்ன?
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய சென்னை அணி வீரர் ஷிவம் துபே, 5 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 52 ரன்களை குவித்தார். இது பெங்களூரு அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், வெயின் பார்னெல் வீசிய 16வது ஓவரின் 3வது பந்தை துபே தூக்கி அடிக்க பவுண்டரி கோட்டிற்கு அருகே நின்றிருந்த சிராஜ் அதை கேட்ச் பிடித்தார். இதனை கண்ட சகவீரர் கோலி, மகிழ்ச்சியில் தரையை நோக்கி கையால் குத்துவதை போன்று சைகை செய்து, ஆவேசமாக ஏதோ பேசினார். இதற்காக தான் அவருக்கு ஊதியத்தில் 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அணி அபாரம்:
ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூப்ளெசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி கான்வே மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது.
பெங்களூரு அணி வாண வேடிக்கை:
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில், கேப்டன் டூப்ளெசி மற்றும் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினர். ஆனாலும், பின்வரிசை வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டு பிளிசி 62 ரன்களும், மேக்ஸ்வல் 76 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம், புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்வியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பெங்களூரு 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது.