Venkatesh Iyer: ரஜினி ரசிகன்.. படிப்புல சுட்டி.. கிரிக்கெட்டுல கெட்டி.. யாரு இந்த வெங்கடேஷ் ஐயர்?
'யாரு சாமி நீ?’ என்று கேட்கும் அளவுக்கு நேற்று ஒரே நாளில் பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் வெங்கடேஷ் ஐயர்..
'எவ்ளோ சைலண்டா இருக்காங்க.. யாருனே சொல்லாம?!' என்ற வடிவேலு டயலாக்கை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர். 'யாரு சாமி நீ?’ என்று கேட்கும் அளவுக்கு நேற்று ஒரே நாளில் பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
நேற்று என்ன நடந்தது?
ஐ.பி.எல். தொடரின் 34-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அபுதாபியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில், கொல்கத்தாவுக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் களமிறங்கினர். பும்ரா ஓவரில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது கில் அவுட்டானார். ஆனால், ஒன் மேன் ஆர்மியாக 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என தெறிக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர், அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முதலில் நிதானமாக விளையாடிய திரிபாதியும் பிறகு வெங்கடேஷுடன் ஜோடி சேர, அவர் தன் பங்கிற்கு 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என எளிதாக இலக்கை எட்டினர். இப்படியாக நேற்றைய போட்டியில் அடி.. அடி.. அதிரடி என வாணவேடிக்கை காட்டிய வெங்கடேஷ் ஐயர் யார்? அவரைப்பற்றிய சுவாரஷ்ய தகவல்கள் பல உள்ளன.
இந்தூரைச் சேர்ந்த கிரிக்கெட்டரான வெங்கடேஷ் ஐயருக்கு வயது 26. மத்தியப் பிரதேசத்தின் டொமஸ்டிக் கிரிக்கெட்டராக இருந்துள்ளார்.
ரஜினி ஃபேன்..
நேற்று ஐபிஎல்-ல் அதிரடி ஸ்டைல் காட்டிய வெங்கடேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினி ஃபேன். ரஜினி தான் பேவரைட் என்று சொல்லும் வெங்கடேஷ் அவர் படத்தை மிஸ் செய்வதே இல்லையாம். தான் ஒரு ரஜினியின் பக்தர் என சொல்லிக்கொல்லும் வெங்கடேஷ் அவரது படத்தை பல முறை பார்த்துள்ளாராம். ரஜினி ஒரு லெஜண்ட் என பாராட்டுகிறார் வெங்கடேஷ்.
படிப்புல சுட்டி..
'உனக்கு படிப்புதான் வர்ல.. விளையாடவாவது போ' என்ற வழக்கமான டயலாக் வெங்கடேஷ் வாழ்க்கையில் இல்லை. இவரு படிப்புலயும் சுட்டி. இவர் எப்போது பிரைட் தானாம். பிகாம் படித்துள்ள இவர் தான் கல்லூரி டாப். நான் படிப்புல சுட்டிதான் என வெங்கடேஷ், பிரபல கிரிக்கெட் தளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
ஆடுனா கிரிக்கெட் தான்...
ரயில்வே வேலையை விட்டுவிட்டு ரயில் பிடித்து கிரிக்கெட் பக்கம் தோனி ஓடி வந்தது போலவே, வெங்கடேஷும் இன்னொரு வேலையை தூக்கி வீசிவிட்டு ஓடி வந்துள்ளார். டெலாய்டு என்ற அக்கவுண்டிங் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. 2018ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் கால்பதிக்க வேண்டிய கட்டாயம். நடிச்சா ஹீரோ தான் என்ற முடிவெடுத்த வெங்கடேஷ் ஓட்டம் பிடித்து கிரிக்கெட் கிரவுண்டுக்குள் வந்து நின்றுள்ளார். அவ்ளோ வெறியாம் கிரிக்கெட் மீது.
எல்லாமே அம்மாதான்...
தென்னிந்தியாவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வெங்கடேஷுக்கு எல்லாமே அவர் அம்மாதானாம். வழக்கமான இந்திய குடும்பத்தின் கதைப்படியே தான் இவரது குடும்பமும். படிப்பு.. படிப்பு.. என புத்தகத்தை நோக்கியே ஓடிய வெங்கடேஷை கிரிக்கெட் பக்கம் திருப்பியதே அவரது அம்மாதானாம். உனக்கு எது வருமோ.. அதைச் செய் என கையில் பேட் கொடுத்துள்ளார் வெங்கடேஷின் தாய்.
6 டூ ஓப்பனிங்..
மத்தியப் பிரதேச உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் 6வது பேட்ஸ்மேனாக களம் இறங்குவாராம் வெங்கடேஷ். இந்த பையன் கிட்ட என்னவோ இருக்குவென வெங்கடேஷை ஷைன் செய்தவர் பிரபல கோச் சந்திரகாந்த் பண்டிட். வெங்கடேஷை 6 வது இடத்தில் இருந்து ஓப்பனிங் ஆடச் செய்தவர் அவரது பேட்டிங் ஸ்டைலிலும் பல மாறுதல்களை செய்துள்ளார்.அதன் பின்பு அதிரடி தானாம்..
அடிதூள்..
உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து தனது ஆட்டத்தை சிறப்பாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் வெங்கடேஷ். முஸ்தாக் அலி ட்ராபி போட்டியில் 5 இன்னிங்ஸில் 149.34 ஸ்டைக் ரேட் வைத்துள்ளார். தொடர்ந்து ஃபாமிலேயே இருந்த வெங்கடேஷை கண்டுகொண்டுள்ளது கொல்கத்தா. உடனே மும்பை வாங்க என்ற அழைப்பை ஏற்று அங்கு பறந்துள்ளார் வெங்கடேஷ். அதற்கு பின்பு கொல்கத்தாவோடு கைகோத்துள்ளார்.