IPL CSK vs DC : கட்டாயம் வெற்றி நெருக்கடியில் சென்னை...! வெற்றியை தொடரும் ஆர்வத்தில் டெல்லி..! வெல்லப்போவது யார்..?
IPL DC vs CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இன்று மோதுகின்றன.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 55வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி ஆகும்.
சென்னை அணி இந்த தொடர் தொடங்கியது முதலே மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் பெங்களூருடன் தோல்வியடைந்த சென்னை அணிக்கு ஏறக்குறைய ப்ளே ஆப் சுற்று வாய்ப்பு என்பது மங்கிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும், பிற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து சென்னைக்கு வாய்ப்பு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். டேவன் கான்வே இந்த போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டும். ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
ஆல்ரவுண்டர்களான மொயின் அலியும், ஜடேஜாவும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அசத்தலாக செயல்பட வேண்டியது அவசியம். குறிப்பாக, முன்னாள் கேப்டன் ஜடேஜா தனது பழைய பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். தீக்ஷானா, முகேஷ் சவுத்ரி, ப்ரெட்டோரியஸ் சிறப்பாக பந்துவீசினால்தான் எதிரணிக்கு நெருக்கடி அளிக்க முடியும். சென்னை அணியின் பீல்டிங் என்பது இதுவரை எந்த தொடரில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. கைக்கே வரும் கேட்ச்களை எல்லாம் கோட்டை விடுவது குறிப்பாக, ஜடேஜா போன்ற சூப்பர் பீல்டர்களே ஈசி கேட்ச்களை கோட்டை விடுவது ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது. தோனி அதிரடி காட்ட வேண்டியது அணிக்கு மிக மிக அவசியம்.
சென்னையுடன் ஒப்பிடும்போது டெல்லி சற்று பலம் பொருந்திய அணியாகவே உள்ளது. டேவிட் வார்னரும், பிரித்வி ஷாவும் அருமையான தொடக்கம் அளிக்க வேண்டியது அந்த அணிக்கு அவசியம். கேப்டன் ரிஷப்பந்த் அதிரடியாக ஆடி நீண்ட நேரம் களத்தில் நின்றால் எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடி ஏற்படும். லலித் யாதவும் பொறுப்புடன் பேட் செய்ய வேண்டியது அவசியம்.
கடந்த சில போட்டிகளாக டெல்லிக்கு கடைசி கட்டத்தில் ஆபத்பாந்தவனாக ரோவ்மென் பாவெல் உள்ளார். அவரது அதிரடி இந்த போட்டியிலும் தொடர்ந்தால் டெல்லி இமாலய இலக்கை அடையும். சுழலில் அக்ஷர் படேல், வேகத்தில் ஷர்துல் தாக்கூர் டெல்லிக்கு பக்கபலமாக உள்ளனர். இருவரும் ஆல் ரவுண்டர்கள் என்பதால் டெல்லிக்கு கூடுதல் பலம். முஸ்தபிஷீர் ரஹ்மான் வேகத்தில் கலக்க உள்ளார்.
டெல்லி 10 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 5வது இடத்திலும், சென்னை 10 போட்டிகளில் 3 வெற்றியுடன் 9வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் தோற்றால் சென்னை அணியின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட வாய்ப்பு உள்ளது. இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் ஆடியுள்ளன. டெல்லி 10 போட்டியிலும் சென்னை 16 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக ஆடிய 5 போட்டியில் டெல்லி 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்