IPL GT vs LSG : ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்லும் முதல் அணி யார்..? குஜராத் - லக்னோ மோதல்..!
IPL LSG vs GT : ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகும் முதல் அணி யார் என்பதை தீர்மானிப்பதற்காக குஜராத் அணியும், லக்னோ அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று புனேவில் நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த ஐ.பி.எல். தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் அணியும், லக்னோ அணியும் அனுபவம் வாய்ந்த அணிகளையே வீழ்த்தும் அளவிற்கு வலிமை மிகுந்த அணிகளாக இந்த தொடரில் வலம் வருகின்றனர்.
குஜராத் அணியைப் பொறுத்தவரை ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை என்ற சூழலில் அந்த அணி கடந்த இரு போட்டிகளில் தோல்வி அடைந்தது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரையில் சஹாவும், சுப்மன்கில்லும் அதிரடி தொடக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம். இவர்கள் அதிரடி காட்டினால் நிச்சயம் குஜராத்திற்கு வலுவான அடித்தளம் அமையும்.
தமிழக வீரர் சாய் சுதர்சனும் அதிரடியாக ஆட வேண்டியது அவசியம். குஜராத் அணிக்கு கடந்த சில போட்டிகளில் தூணாக விளங்குபவர்கள் டேவிட் மில்லர். இவர் களத்தில் இருந்தும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் தோல்வி அடைந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இதனால், மில்லர் தனது அதிரடியை காட்ட வேண்டியது அவசியம்.
அதேபோல ஆல்ரவுண்டர்களான ராகுல் திவேதியாவும், ரஷீத்கானும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் அசத்தினால்தான் குஜராத் மீண்டும் தனது பலத்திற்கு திரும்ப இயலும். குறிப்பாக, ராகுல் திவேதியா பேட்டிங்கிலும், ரஷீத்கான் தனது சுழலிலும் எதிரணிக்கு குடைச்சல் கொடுக்க வேண்டியது அவசியம். கேப்டன் பாண்ட்யா தனது ஆல்ரவுண்டர் பணியை அற்புதமாக செய்தால் லக்னோவிற்கு நிச்சயம் நெருக்கடியாக அமையும். வேகப்பந்துவீச்சில் ஷமி, பெர்குசன் கட்டுக்கோப்பாக வீச வேண்டியது அவசியம்.
லக்னோ அணியைப் பொறுத்தவரை அந்த அணிக்கு கேப்டன் கே.எல்.ராகுல் பலமாக உள்ளார். கடந்த போட்டியில் எந்த பந்தையும் சந்திக்காமல் அவர் அவுட்டாகியதால் இந்த போட்டியில் அதிரடி காட்ட முனைப்புடன் ஆடுவார். அவருக்கு டி காக்கும் அதிரடியில் ஒத்துழைப்பு அளிப்பார். லக்னோ அணிக்கு ஒன் டவுன் வீரராக தீபக் ஹூடா அசத்தி வருகிறார். இந்த போட்டியிலும் அவரது அசத்தல் பேட்டிங் தொடர வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் ஸ்டோய்னிஸ் கடைசி கட்டத்தில் காட்டிய அதிரடியை இந்த போட்டியிலும் காட்ட வேண்டியது அவசியம்.
ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அசத்தி வருகிறார். அவரது அசத்தல் இந்த போட்டியில் தொடர்ந்தால் லக்னோவிற்கு பலமாக அமையும். பந்துவீச்சில் ஆவேஷ்கானும், மோஷின்கானும் வேகத்தில் அசத்தி வருகின்றனர். சுழலில் ரவி பிஷ்னோ நிச்சயம் குடைச்சல் அளிப்பார். சமீராவும் வேகத்தில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் குஜராத்துடன் தோற்றதற்கு லக்னோ பழிதீர்க்குமா? என்பது இன்று தெரிய வரும். லக்னோ அணியும், குஜராத் அணியும் புள்ளிப்பட்டியலில் 8 வெற்றிகளுடன் சம நிலையில் உள்ளன, தற்போது லக்னோ முதலிடத்திலும், குஜராத் 2வது இடத்திலும் உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தங்களது ப்ளே ஆப் வாய்ப்பை முதலாவது அணியாக உறுதி செய்யும் என்று நம்பலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்