RR vs GT, IPL 2023: புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு..? ராஜஸ்தான் - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ராஜஸ்தான் - குஜராத் மோதல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமயிலான குஜராத் அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
நடப்பு தொடரில் இதுவரை:
நடப்பு தொடரில் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் தலா 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், குஜராத் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் அணி கடைசியாக விளையடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் அணி தனது கடைசி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
அணிகளின் நிலவரம்:
ராஜஸ்தான் அணியில் ஜெய்ஷ்வால், பட்லர், சாம்சன், படிக்கல் ஹெட்மேயர் மற்றும் ஜுரெல் ஆகியோர் பேட்டிங்கில் பட்டையை கிளப்ப அஷ்வின், சாஹல், டெரெண்ட் போல்ட் மற்றும் சந்தீப் ஷர்மா ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக உள்ளனர். அவர்களுக்கு சற்றும் சளைக்காத குஜராத் அணியில் சுப்மன் கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர், திவேதியா மற்றும் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் வரிசை கட்டி நிற்கின்றனர். பந்துவீச்சிலும் ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
மைதானம் நிலவரம்:
பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நடப்பு தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன. உலகின் பெரிய மைதானமான இதில் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்கை இலக்கை நிர்ணயித்தால், எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும். இந்த மைதானத்தில் இதுவரை 20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், 8 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 12 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
ராஜஸ்தான் உத்தேச அணி:
ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர், ஜூரெல், அஷ்வின், ஜேசன் ஹோல்டர், போல்ட், சந்தீப் சர்மா, சாஹல்
குஜராத் உத்தேச அணி:
சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஸ்வா லிட்டில்