IPL 2025 Playoffs: ஒரே ஒரு இடம்தான்.. ப்ளே ஆஃப் செல்வது யாரு? மும்பையுடன் மல்லுகட்டும் டெல்லி!
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத், பெங்களூர், பஞ்சாப் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் எஞ்சிய ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி இடையே மோதல் உருவாகியுள்ளது.

ஐபிஎல் தொடர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் செல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதலால் ஒத்திவைக்கப்பட்ட தொடர் மீண்டும் கடந்த 17ம் தேதி தொடங்கியது.
ப்ளே ஆஃப்க்கு மல்லுகட்டு:
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் கடந்த இரண்டு நாள் ஆட்டத்தின் முடிவில் 3 அணிகள் தங்கள் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குஜராத், பெங்களூர், பஞ்சாப் அணிகள் தங்கள் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் ப்ளே ஆஃப் செல்லப்போகும் கடைசி அணி யார்? என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மும்பையா? டெல்லியா?
ப்ளே ஆஃப் செல்லப்போகும் கடைசி இடத்திற்கு மும்பைக்கும், டெல்லிக்கும் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது. டெல்லி அணிக்கும், மும்பை அணிக்கும் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கியமான லீக் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.
டெல்லி அணியை காட்டிலும் மும்பை அணிக்கு ரன்ரேட் மிகவும் நன்றாக இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறத்தாழ உறுதியாகிவிடும். அதன்பின்பு, டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமென்றால் பஞ்சாப் அணியுடனான தனது கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
அதேபோல, மும்பை அணியுடனான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் அவர்களது ரன் ரேட் அதிகரிப்பதுடன் புள்ளிகள் 15 ஆக அதிகரிக்கும். அதேசமயம், பஞ்சாப் அணியுடனான கடைசி போட்டியிலும் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
ஒருவேளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் மும்பை அணி கட்டாயம் பஞ்சாப் அணியுடனான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான் அவர்கள் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும்.
லக்னோவிற்கும் வாய்ப்பு உண்டா?
மும்பை, டெல்லி அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் லக்னோ அணிக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஓரளவு உள்ளது. அவர்கள் கைவசம் 3 போட்டிகள் எஞ்சிய நிலையில் 3 போட்டிகளிலும் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களது ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாக வாய்ப்பு உண்டு.
தற்போது 10 புள்ளிகளுடன் உள்ள லக்னோ அணி சன்ரைசர்ஸ், குஜராத், பெங்களூர் அணிகளுடன் தனது எஞ்சிய போட்டியில் ஆடுகிறது. இதில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.
ஒரு இடத்திற்கு பெரும் மல்லுகட்டு?
இந்த போட்டிகளில் எல்லாம் அபார வெற்றி பெற்றால் மட்டுமே ரன்ரேட் உயர்ந்து 16 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு கிட்டும். அதற்கும், டெல்லி, மும்பை அணிகளின் முடிவுகள் இவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். அது நடப்பது மிகவும் சவால் என்பதால் தற்போதைய நிலவரப்படி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது மும்பையா? டெல்லியா? என்றே மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்துள்ளது.




















