LSG Vs DC, IPL 2024: ஐபிஎல் தொடர் - லக்னோவின் வெற்றிப்பயணம் தொடருமா? டெல்லியுடன் இன்று மோதல்
LSG Vs DC, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோத உள்ளன.
LSG Vs DC, IPL 2024: லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று கே.எல். ராகுல் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
லக்னோ - டெல்லி மோதல்:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. லக்னோ அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற லக்னோ முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், டெல்லி அணியோ இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அந்த அணி தோல்வியுற்றது. இதனால், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியை பொறுத்தவரையில் கே.எல். ராகுல், ஸ்டோய்னிஸ், பூரான் மற்றும் டி காக் ஆகியோர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். பந்துவீச்சில் இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் கவனம் ஈர்க்கிறார். அதேநேரம், காயம் காரணமாக இன்றைய போட்டியில் அவர் களம் கண்பாரா என்பது சந்தேகமே. யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். டெல்லி அணியில் கேப்டன்ம் ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளன. ஆனால் டேவிட் வார்னர் போன்ற மற்ற முக்கிய வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சில் இஷாந்த் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஓரளவிற்கு நம்பிக்கை தருகின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணியே 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 195 ரன்களையும், குறைந்தபட்சமாக 193 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 189 ரன்களையும், குறைந்தபட்சமாக 143 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
ஏக்னா கிரிக்கெட் மைதானம் ஸ்லோ பிட்ச் என்பதோடு, குறைந்தபட்ச ஸ்கோரிங் போட்டிகளுக்கு பிரபலமானதாகும். இன்றைய போட்டியிலும் அதே சூழல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.
உத்தேச அணி விவரங்கள்:
லக்னோ: குயின்டன் டி காக், KL ராகுல், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்
டெல்லி: டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்ட்சன், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்