KKR vs PBKS Match Highlights: பேர்ஸ்டோவ் சதம்; 262 ரன்கள் இலக்கை எட்டி KKR-ஐ 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்
KKR vs PBKS Match Highlights: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17 வது ஐபிஎல் தொடரின் 42 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்தப் இந்த போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை தொடக்கம் முதல் இறுதி வரை துவம்சம் செய்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது.
அடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை பேர்ஸ்டோவ் மற்றும் ப்ரப்சிம்ரன் தொடங்கினர். பவர் பிளவின் முதல் நான்கு ஓவர்களில் ப்ரப்சிம்ரன் அதிரடியாக பவுண்டரி சிக்ஸர் விளாச கொல்கத்தா அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. 18 பந்தில் தனது அரைசதத்தினை அதிரடியாக ப்ரப்சிம்ரன் பூர்த்தி செய்தார். பவர் பிளேவின் கடைசி ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் மூன்று பவுண்டரி இரண்டு சிக்சர் விளாசிய பேர்ஸ்டோவ் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க முயற்சித்த போது ப்ரப்சிம்ரன் ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 93 ரன்கள் குவித்து இருந்தது. 7.2 ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 23 பந்தில் தனது அரை சதத்தினை எட்டினார். மூன்றாவது வீரராக களம் இறங்கிய ரூஸோவும் தனது பங்கிற்கு லாவகமாக வந்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசினார். இவர்கள் கூட்டணி வலுவான நிலையில் இருந்தபோது சுனில் நரைன் இவர்கள் கூட்டணியை பிரித்தார். அடுத்து வந்த ஷஷாங்க் சிங் வருண் சக்ரவர்த்தி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார்.
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்தது. தொடக்கவீரராக களமிறங்கிய பேர்ஸ்டோவ் 45 பந்தில் தனது சதத்தினை 8 பவுண்டரி 8 சிக்ஸருடன் பூர்த்தி செய்தார். அதோபோல் ஷஷாங்க் சிங் 23 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். இறுதியில் கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்கவீரராக களமிறங்கிய பேர்ஸ்டோவ் இறுதிவரை களத்தில் இருந்தார். இவர் 48 பந்தில் 8 பவுண்டரி 9 சிக்ஸருடன் 108 ரன்கள் சேர்த்திருந்தார். அதேபோல் ஷஷாங்க் சிங் 28 பந்தில் இரண்டு பவுண்டரி 8 சிக்ஸர் விளாசி 68 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் இமாலய இலக்கை ஒரு அணி சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் இணைந்து மொத்தம் 42 சிக்ஸர்கள் விளாசினர். டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை எதிர்கொண்ட போட்டியும் இதுதான்.