(Source: ECI/ABP News/ABP Majha)
IPL2023 Final CSK vs GT: அகமதாபாத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை; இறுதிப் போட்டி நடக்குமா? குழப்பத்தில் ரசிகர்கள்..!
IPL2023 Final CSK vs GT: ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். தொடர்ந்து மழை நீடித்தால் போட்டி நாளைக்கு ஒத்தி வைக்கப்படும் என்பதால், போட்டி இன்று நடைபெறுமா அல்லது நாளை நடைபெறுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
CSK vs GT ஃபைனல் நடக்காவிட்டால் என்ன ஆகும்?
'அக்குவெதர்' வானிலை கணிப்புகளின்படி, சுற்றுச்சூழலில் 56% மேக மூட்டம் காணப்படலாம் மற்றும் மாலையில் 61% மழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இறுதிப் போட்டியின் போது 48% ஈரப்பதத்துடன் வானிலை இருக்கும் என்று 'பிபிசி வெதர்' கணித்துள்ளது. துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால், அதாவது மழை வந்து விளையாட்டு பாதிக்கப்பட்டால், ஒரு ரிசர்வ் டே கிடைக்கும். அதாவது அடுத்த நாள் மே 29 அன்று இரவு 8.00 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கும். அன்று போட்டி முதலில் இருந்து தொடங்காமல் முதல் நாளில் விட்ட இடத்தில் இருந்து துவங்கும்.
ஒரே ஒரு ஓவராவது நடத்தப்படும்
அதோடு முதல் நாள் மற்றும் ரிசர்வ் நாள் இரண்டிற்கும் கூடுதலாக 120 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமான போட்டிகளுக்கு கட் ஆஃப் நேரம் இரவு 10.26 ஆகும். அந்த நேரத்தில் மழை நின்றால் ஐந்து ஓவர் போட்டி நடத்தலாம். ஆனால் அதை தாண்டினால் ஆட்டம் நிறுத்தப்படும். ஆனால் இறுதிப்போட்டிக்கு அந்த நேரம் இரவு 12.26 வரை இருக்கும். இதே நேரம்தான் ரிசர்வ் நாளுக்கும்.
இது தவிர, தேவைப்பட்டால், ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், இதனால் ஒவ்வொரு அணியும் குறைந்தது ஐந்து ஓவர்கள் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். முதல் நாளில் (மே 28) போட்டி தொடங்கப்பட்டிருந்தால் (குறைந்தது ஒரு பந்து வீசப்பட்டிருந்தால் கூட), அடுத்த நாளில் (மே 29) ஆட்டம் விட்ட இடத்தில் இருந்ததுதான் துவங்கும். ஒருவேளை டாஸ் மட்டும் போட்டு, அணிகள் தங்கள் பிளேயிங் லெவனை அறிவித்து, பேட்டிங் அல்லது பவுலிங் என்று முடிவு செய்த பிறகு, ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் அடுத்த நாளைக்கு மாற்றபட்டால் மீண்டும் முதலில் இருந்து டாஸ் போடுவார்கள். அணிகள் தங்கள் முடிவுகளை, பிளேயிங் லெவனை மாற்றிக்கொள்ளலாம். இரண்டு நாள் முழுவதும் மழையாக பெய்து, ஐந்து ஓவர்கள் கொண்ட போட்டி கூட நடத்த முடியாத பட்சத்தில், அதிகாலை 1.20 மணிக்கு, இறுதிப் போட்டி ஒரே ஒரு சூப்பர் ஓவராக மாற்றப்படும். அந்த ஒரு ஒவரையும் நடத்த முடியாமல் போனால் என்னாகும்? குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும். புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்த அணிக்கு கோப்பை என்பது விதிமுறை.