IPL LSG vs SRH : லக்னோ அணி 169 ரன்களை குவித்தது..! முதல் வெற்றி பெறுமா சன்ரைசர்ஸ்...!
IPL LSG vs SRH :
மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் 12வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 1 ரன்கள் எடுத்திருந்த குயின்டின் டி காக் வாஷிங்டன் சுந்தர் பந்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், களமிறங்கிய எவின் லீவிசும் 1 ரன்னில் வாஷிங்டன் சுழலில் எல்.பி.டபுள்யூ ஆகி அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே களமிறங்கிய உடனே பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். பின்னர், அவரும் 10 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ரோமாரியா பந்தில் அவுட்டானார். இதனால், 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை லக்னோ இழந்தது. பவர்ப்ளேவான 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது.
இந்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலும்-தீபக்ஹூடாவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். இதனால், லக்னோ அணி 9.1 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. 10 ஓவர்களில் முடிவில் அந்த அணி 63 ரன்களை எட்டியது. அதற்கு பிறகு தீபக் ஹூடாவும், கே.எல்.ராகுலும் தங்களது ஆட்டத்தை அதிரடிக்கு மாற்றினார். குறிப்பாக, தீபக் ஹூடா நாலாபுறம் பந்துகளை விளாசினார். இதனால், 15 ஓவர்களில் 110 ரன்களை லக்னோ கடந்தது. தீபக் ஹூடா அதிரடியாக ஆடி 31 பந்துகளில் அரைசதம் விளாசினார். அரைசதம் அடித்த உடனே சிக்ஸர் அடிக்க முயன்று தீபக்ஹூடா 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 33 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசியிருந்தார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பிறகு கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடத் தொடங்கினார். 18வது ஓவரில் கே.எல்.ராகுல் கைக்கு அளித்த கேட்ச்சை அப்துல் சமத் தவறவிட்டார். ஆனால், அடுத்த ஓவரிலே நடராஜன் வீசிய பந்தில் கே.எல்.ராகுல் எல்.பி.டபுள்யூ ஆனார். அவர் 50 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்தார். அதே ஓவரில் குருணால் பாண்ட்யாவையும் நடராஜன் போல்டாக்கினார். கடைசியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது.
ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர், ரோமாரியோ ஷெப்பர்ட் மற்றும் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்