IPL Final: ஆர்சிபிக்கு ஒரு குத்து.. பஞ்சாப்பிற்கு ஒரு குத்து.. இறுதிப்போட்டியில் கெயில் யாருக்கு சப்போர்ட்?
ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் கிறிஸ் கெயில் தனது ஆதரவு யாருக்கு? என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபி - பஞ்சாப் இறுதிப்போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசி வருகிறது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் மைதானத்திற்கு வந்துள்ளனர்.
இறுதிப்போட்டியில் கிறிஸ் கெயில்:
வர்ணனையில் இடம்பிடித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி கிறிஸ் கெயிலும் இந்த போட்டியை காண வந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் ஆடத்தொடங்கிய பிறகு இந்தியாவில் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அவர் ஆர்சிபி அணிக்காக ஆடிய நாட்களில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகினர்.
ஆர்சிபி அணியின் தவிர்க்க முடியாத வீரராக உலா வந்த கெயில் பின்னர் ஆர்சிபியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பஞ்சாப் அணிக்காக ஆடினார். அவர் ஆடிய இரண்டு அணிகளும் இன்று இறுதிப்போட்டியில் ஆடி வரும் நிலையில் போட்டியை காண வந்துள்ள கிறிஸ் கெயில் யாருக்கு ஆதரவு அளிப்பார்? என்ற கேள்வி எழுந்தது.
கெயில் ஆதரவு யாருக்கு?

ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஆர்சிபி-யின் சீருடையையும், பஞ்சாப்பின் டர்பனை தலையில் கட்டியும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதாவது, தான் ஆர்சிபிக்கும் ஆதரவு, பஞ்சாப்பிற்கும் ஆதரவு என்று மறைமுகமாக குறிப்பிடுவதாக இந்த புகைப்படம் உள்ளது. ஆனால், கிறிஸ் கெயிலின் ஆதரவு ஆர்சிபி அணிக்கே இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஏனென்றால், அவருக்காக இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது ஆர்சிபி அணிக்காக அவர் ஆடத்தொடங்கிய பிறகே ஆகும். 2008ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டியில் 142 போட்டியில் 141 இன்னிங்சில் ஆடி 4 ஆயிரத்து 965 ரன்களை எடுத்துள்ளார். அதில் 6 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 175 ரன்கள் எடுத்துள்ளார்.

கெயில் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக தனது கேரியரைத் தொடங்கினார். பின்னர், 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை ஆர்சிபி அணிக்காக ஆடினார். பின்னர், 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பஞ்சாப் அணிக்காக ஆடினார்.




















