IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL Playoff RCB Stats: ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி, பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

IPL Playoff RCB Stats: ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி கடந்த 5 ஆண்டுகளில் மூன்று முறை எலிமினேட்டர் போட்டிகளில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
18 வருட காத்திருப்பு:
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமானது முதல் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்றுள்ள 8 அணிகளில் ராயல் சேலஞ்சர் பெங்களூருவும் ஒன்று. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாவிட்டாலும், விராட் கோலி எனும் ஜாம்பவானின் இருப்பு காரணமாக அதிகப்படியான ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, நடப்பாண்டு கோப்பையை வெல்வதற்கான அனைத்து சாதகமான சூழல்களையும் பெங்களூரு பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற 18 ஆண்டுகால காத்திருப்பு நடப்பு சீசனில் முடிவுக்கு வருமா? என ஒட்டுமொத்த ஆர்சிபி ரசிகர்களும் காத்திருக்கின்றன. அதற்கான முக்கியமான நிகழ்வாக தான், இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆர்சிபி எதிர்கொள்கிறது.
முதல் குவாலிஃபையரில் ஆர்சிபி..
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக அதிகமுறை பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்ற அணி ஆர்சிபி தான். ஆனால், அந்த சுற்றி அணியின் செயல்பாடு என்பது மிகவும் மோசமாக உள்ளது. மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. பிளே-ஆஃப் சுற்றில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நான்கு முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியபோது, நான்குமுறையும் எலிமினேட்டர் போட்டியை விளையாடி தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு குறைந்துள்ளது. காரணம், குவாலிஃபையர் 1 போட்டியில் விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஒருவேளை தோல்வியுற்றாலும், மீண்டும் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடி இறுதிப்போட்டிக்கு செல்ல இரண்டாவது வாய்ப்பையும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் 2016ம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறக்கூடும்.
எலிமினேட்டர் கண்டம் ஓவர்:
சர்வதேச போட்டிகளில் தென்னாப்ரிக்காவை போன்று ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி, முக்கியமான போட்டிகளில் CHOKERS என விமர்சிக்கப்படுவது உண்டு. லீக் சுற்றில் கடுமையாக போராடி பிளே-ஆஃப் சுற்றில் ஒரே போட்டியில் தோல்வியுற்று வெளியேறுவதை மீண்டும் மீண்டும் அந்த அணி நிகழ்த்தி காட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை, 6 முறை பிளேஆஃப் சுற்றின் முதல் போட்டியோடு பெங்களூரு அணி நடையை கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை இறுதிப்போட்டிக்கு செல்ல இரண்டு வாய்ப்புகள் இருப்பது பெங்களூரு அணிக்கு கூடுதல் சாதகமாக உள்ளது.
பிளே-ஆஃப் சுற்றில் பெங்களூரு அணியின் வரலாறு:
- 2009 - இறுதிப்போட்டி - டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- 2010 - அரையிறுதி - மும்பை அணியிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- 2011 - இறுதிப்போட்டி - சென்னை அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- 2015 - குவாலிஃபையர் 2 - சென்னை அணியிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
- 2016 - இறுதிப்போட்டி - ஐதராபாத் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- 2020 - எலிமினேட்டர் - ஐதராபாத் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
- 2021 - எலிமினேட்டர் - கொல்கத்தா அணியிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
- 2022 - குவாலிஃபையர் 2 - ராஜஸ்தான் அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
- 2024 - எலிமினேட்டர் - ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
விராட் கோலி எப்படி?
ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணிக்காக நீண்ட காலம் களமிறங்கிய வீரர் என்ற பெருமை கோலியையே சேரும். காரணம் கடந்த 2008ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காகவே கோலி விளையாடி வருகிறார். இதுவரை அந்த அணிக்காக ஒட்டுமொத்தமாக 8 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். ஆனால், 15 பிளே-ஆஃப் போட்டிகளில் 26.23 என்ற சராசரியுடன், வெறும் 341 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இரண்டு அரைசதங்கள் அடித்துள்ள கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 70 ஆகும். லீக் சுற்றில் தொடர்ந்து அசத்தி வந்தாலும், முக்கியமான பிளே-ஆஃப் சுற்றில் பல நேரங்களில் கோலி சோபிக்க தவறியதும் அணியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது. இந்த முறை அந்த வரலாற்றை மாற்றுவாரா கோலி?
பஞ்சாப் அணிக்கு எதிராக கோலி
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணிக்கு எதிராக இதுவரை, 133.49 ஸ்ட்ரைக் ரேட்டில் 36.80 சராசரியுடன் ஆயிரத்து 104 ரன்களை கோலி விளாசியுள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 113 ரன்களை விளாசியுள்ளார். நடப்பு தொடரில் பஞ்சாபிற்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளில், ஒன்றில் வெறும் 1 ரன் மட்டுமே சேர்க்க, இரண்டாவது போட்டியில் 74 ரன்களை விளாசியுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அதிக ரன்களை சேர்த்த வீரர்கள் பட்டியலில், வார்னருக்கு (1,134 ரன்கள்) அடுத்தபடியாக 31 ரன்கள் பின்தங்கி கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.




















