(Source: ECI/ABP News/ABP Majha)
Suryakumar Yadav: டிவில்லியர்ஸை விட சூப்பர்.. சூர்யாவை பார்த்தா பயமா இருக்கு - ஹர்பஜன் சிங்!
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவைப் பார்த்தால் பயமாக இருக்கின்றது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தினைப் பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கின்றது. நல்லவேளை நான் இப்போது கிரிக்கெட் விளையாடவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி என்றாலே அதிரடி மற்றும் சரவெடி கிரிக்கெட் விருந்து ரசிகர்களுக்கு எப்போதும் படைக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தினை ரசிகர்களுக்கு கொடுத்துவந்த ஐபில் லீக், தற்போது ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் அதிரடியான அதேநேரத்தில் சுவாரஸ்யமான ஆட்டத்தினை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றது.
ஐபிஎல்
கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் பரபரப்பாக நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் லீக் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை அணியும் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் சேர்த்தது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக களமிறங்கிய அனைவரும் அதிரடியாக விளையாடி இலக்கை விரைவில் எட்டினர். குறிப்பாக 19 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 52 ரன்கள் குவித்து மிரட்டி இருந்தார்.
சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்ட, நடப்பு ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஒருகட்டத்தில் சூர்யகுமார் யாதவை எப்படி நிறுத்துவது என தெரியாமல் பெங்களூரு அணியே தவித்துக்கொண்டு இருந்தது. டாஸாக வந்த பந்தினை சிக்ஸர் விளாச முயற்சி செய்து கேட்ச் ஆகி வெளியேறினார். வழக்கமாகவே பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி என்றால் சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார், அதேபோல் நேற்றைய ஆட்டத்திலும் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் மீண்டும் ஒரு முறை தன்வசம் ஈர்த்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
சூர்யாவைப் பார்த்தால் பயமா இருக்கு
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சூர்யகுமார் யாதவ் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸை விடவும் சிறந்த பேட்ஸ்மேன் என தோன்றுகின்றது. ஒரு பந்துவீச்சாளார் எங்கு பந்து போட்டாலும் அதனை பவுண்டரி லைனுக்கு விரட்டும் திறமை கொண்ட சூர்யகுமார் யாதவை நினைத்தால் பயமாக இருக்கின்றது. நல்லவேளை நான் இப்போது கிரிக்கெட் விளையாடுவதில்லை. சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் நான் அவரை முதலில் எடுப்பேன். சூர்யகுமார் யாதவ் தான் சார்ந்த அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார். ஒரு பேட்ஸ்மேன் அனைத்து பந்து வீச்சாளர்களை இந்த அளவிற்கு டாமினேட் செய்வதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. இதுதான் என்னை மிகவும் அச்சுறுத்துகின்றது” என கூறியுள்ளார்.