IPL 2024: ஐபிஎல் வரலாற்றின் தனித்துவமான சாதனை..! ரோஹித், வாட்சன் வரிசையில் சுனில் நரேன் அதகளம்
IPL 2024: ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேன் ஒரு தனித்துவமான சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
IPL 2024: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம், கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேன் ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.
புதிய சாதனை படைத்த சுனில் நரேன்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். 56 பந்துகளில் 13 பவுண்டரிகள் மட்டும் 6 சிக்சர்கள் உட்பட 109 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனயை நரைன் படைத்துள்ளார். முன்னதாக ரோகித் சர்மா மற்றும் ஷேன் வட்சன் ஆகியோர் இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
சாதனையாளர்கள் விவரம்:
- ரோகித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும்போது, மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். மும்பை அணிக்காக கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கு எதிராக சதம் விளாசியுள்ளார்.
- ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வாட்சன் ஐதராபாத்திற்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார்
- சுன்ல் நரேன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதமும் விளாசியுள்ளார்.
சோகத்தில் முடிந்த சாதனை:
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரரான நரைன், ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். பவுண்டரி மற்றும் சிக்சர் என மைதானத்தில் ரன் மழை பொழிய, ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார் நரைன். இதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 223 ரன்களை குவித்தது.இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த 8 ஓவர்களிலேயே அந்த அணி 100 ரன்களை எட்டியது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியவே ராஜஸ்தான் அணி தடுமாறியது. ஆனாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜோஸ் பட்லர், போட்டியின் கடைசி 5 ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடினார். இதன் மூலம் அவர் சதம் விளாசியதுடன், 20வது ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றி பெறவும் செய்தார். இதனால், நரைனின் சாதனை சதம் சோகத்தில் முடிந்தது.
ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் இதுவரை 168 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 5 அரைசதங்கள், ஒரு சதம் உட்பட ஆயிரத்து 322 ரன்களை குவித்துள்ளார். 170 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 19 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, இதுவரை கொல்கத்தா அணிக்காக மட்டுமே நரேன் விளையாடி வருகிறார்.