(Source: ECI/ABP News/ABP Majha)
MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி
IPL 2024 MI vs RCB Match Highlights: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. 20 ஓவரில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பில் டூ ப்ளெசிஸ், ரஜித் படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் அரைசதம் விளாசினர். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி தனது சரவெடியான பேட்டிங்கினால் இலக்கை வேகமாக துரத்தியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் கூட்டணி பவர்ப்ளேவில், 72 ரன்கள் குவித்தது. இவர்கள் கூட்டணி 8.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இருவரும் பவர்ப்ளே முடிந்த பின்னரும் அதிரடியாக ஆடி வந்தனர். சிக்ஸர்களை விளாசி வந்த இஷான் கிஷன் 35 பந்தில் 69 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரி சிக்ஸர் விளாச, போட்டி முற்றிலும் மும்பை அணியின் பக்கம் வந்தது. எதிர்முனையில் ரோகித் சர்மா பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். ஆட்டத்தின் 12வது ஓவரில் தனது விக்கெட்டினை 38 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
அதிரடியாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவ் 17 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். இவர் 5 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 19வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களத்தில் ஹர்திக் பாண்டியாவும் திலக் வர்மாவும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது மட்டும் இல்லாமல், பெங்களூரு அணி நிர்ணயித்த இலக்கை எட்டினர்.
இறுதியில் மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.