LSG vs MI Match Highlights: இறுதிவரை போராடிய மும்பை; கடைசி ஓவரில் வெற்றியை எட்டிய லக்னோ!
IPL 2024 LSG vs MI Match Highlights: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் டாப் ஆர்டர் பேட்ய்ஸ்மேன் ஸ்டாய்னஸ் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக விளங்கினர்.
17ஆவது ஐபிஎல் தொடரின் 48 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் தனது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது.
இதனால் 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தனது சொந்த மைதானத்தில் லக்னோ அணி களமிறங்கியது. முதல் ஓவரின் நான்காவது பந்தில் லக்னோ அணியின் இம்பாக்ட் பிளேயர் ஆன குல்கர்னியின் விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பாக்ட் பிளேயர் துஷாரா எல் பி டபிள்யூ முறையில் கைப்பற்றினார். அடுத்து களத்திற்கு வந்த ஸ்டாய்னஸ் லக்னோ அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான கே எல் ராகுலுடன் இணைந்து விளையாட ஆரம்பித்தார். முதல் மூன்று ஓவர்களில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. நான்காவது ஓவரை வீசிய மும்பை அணியின் கோட்ஸீ அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி உட்பட மொத்தம் 15 ரன்கள் வாரிக் கொடுத்தார். அடுத்த ஓவர் வீசிய துஷாரா மூன்று பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட மொத்தம் 20 ரன்கள் வாரிக் கொடுத்ததால் லக்னோ அணி வெற்றி இலக்கை நோக்கி விறுவிறுவென முன்னேறியது. பவர் பிளே முடிவில் லக்னோவா அணி ஒரு விக்கெட் இழந்து 52 ரன்கள் சேர்த்து இருந்தது.
தொடர்ந்து நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடி வந்த லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் எட்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இழந்து வெளியேறினார். லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் தனது விக்கெட் இணை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் இழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த தீபக் ஹூடா அதிரடி ஆட்டக்காரர் ஸ்டாய்னஸ் உடன் இணைந்து வெற்றி இலக்கை லக்னோ அணி விரைவில் எட்டுவதற்கு உதவினார். பத்து ஓவர்கள் முடிவின்போது லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் அடுத்த பத்து ஓவர்களில் லக்னோ அணியின் வெற்றிக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
14வது ஓவரின் முதல் பந்தில் தீபக் ஹூடா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை கேப்டன் ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்டாய்னஸ் 39 பந்தில் தனது அரைசதத்தினை எட்டி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனாலும் முகமது நபி வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இறுதியில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியைச் சந்தித்ததால் மும்பை அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு சற்று குறைந்துள்ளது.