DC vs LSG Innings Highlights: அரைசதம் விளாசிய அபிஷேக் போரல் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ்..லக்னோவிற்கு 209 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிடலஸ் அணி.
ஐபிஎல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது ஏற்கனவே 62 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டதால், குஜராத் அணியின் பிளே-ஆப் கனவும் தகர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் கே. எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
அரைசதம் விளாசிய அபிஷேக் - ஸ்டப்ஸ்:
டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் களம் இறங்கினார்கள். இதில் அதிரடியான தொடக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் லக்னோ வீரர் அர்ஷத்கான் வீசிய முதல் ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் களத்தில் நின்ற அபிஷேக் போரல் உடன் ஜோடி சேர்ந்தார் ஷாய் ஹோப். டக் அவுட் ஆகி மெக்குர்க் வெளியேறி இருந்தாலும் இவர்களது பார்ட்னர்ஷிப் அதனை சரி செய்தது. அதன்படி ஷாய் ஹோப் மற்றும் போரல் அதிரடியாக விளையாடினார்கள். இதில் 21 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார் அபிஷேக் போரல். இதனிடையே ஷாய் ஹோப் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மொத்தம் 27 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 38 ரன்கள் எடுத்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் போரல் விக்கெட்டை பறிகொடுத்தார். 33 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி 58 ரன்களை குவித்தார். அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி 111 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. பின்னர் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களம் இறங்கினார். கடந்த போட்டியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இவர் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினார்.
209 ரன்கள் இலக்கு:
23 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் விளாசி 33 ரன்கள் எடுத்தார். அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்தார் டிரிஸ்டன் ஸ்டப்ஸ். இவருடன் அக்ஸர் படேல் இணைந்தார். இதில் அதிரடி சிக்ஸர்களை விளாசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 19 வது ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார். 22 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்கள் எடுத்து அரைசத்தை பதிவு செய்தார்.
கடைசி வரை களத்தில் நின்ற ஸ்டப்ஸ் 57 ரன்கள் எடுக்க அக்ஸர் படேல் 14 ரன்கள் என 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ளது.