DC vs SRH, 1 Innings Highlight: : அபிஷேக், கிளாசென் மிரட்டல் அடி.. டெல்லிக்கு 198 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஐதராபாத்
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 198 ரன்களை ஐதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 198 ரன்களை ஐதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐதராபாத் - டெல்லி மோதல்:
வார இறுதி நாளான இன்று அபிஎல் தொடரில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகள் விளையாடிய போட்டியில், டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் ஐதராபாத் அணி இன்றைய போட்டியில் களமிறங்கியது.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:
தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த திரிபாதியும் 10 ரன்களை சேர்த்து இருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், 44 ரன்களை சேர்ப்பதற்குள் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அபிஷேக் அதிரடி:
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா, டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் வெறும் 25 பந்துகளிலேயே அரைசதம் கடந்து அசத்தினார். இதனிடையே, மார்க்ரம் 8 ரன்களிலும், ப்ரூக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து 67 ரன்களை சேர்த்து இருந்தபோது அபிஷேக் சர்மாவும் ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும்.
நிதான ஆட்டம்:
6-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சமாத் மற்றும் கிளாசென் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேநேரம், சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களையும் விளாசியது. இந்த கூட்டணி 53 ரன்களை சேர்த்தபோது, சமாத் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கிளாசென், டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன் மூலம் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஐபிஎல் தொடரில் அவர் விளாசிய முதல் அரைசதம் இதுவாகும். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளாசென், 27 பந்துகளில் 53 ரன்களை குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்க்ள் அடங்கும். அவருக்கு உறுதுணையாக ஹுசைன் 10 பந்துகளில் 16 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லி அணிக்கு இலக்கு:
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 197ரன்களை சேர்த்தது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதோடு, இஷாந்த் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த இலக்கை டெல்லி அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.