IPL 2023 RCB vs LSG 1st Innings Highlights: எடுபடாத பந்து வீச்சால் பேட்டிங்கில் மிரட்டிய பெங்களூரு; லக்னோவுக்கு 213 ரன்கள் இலக்கு..!
IPL 2023 RCB vs LSG 1st Innings Highlights: லக்னோ அணிக்கு 213 ரன்கள் இலக்கை பெங்களூரு அணி நிர்ணயம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 15வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அனியும் ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே. எல். ராகுல் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் இன்னிங்ஸை முன்னாள் கேப்டனும் தற்போதைய கேப்டனும் தொடங்கினர். அதாவது, விராட் கோலி மற்றும் டூ ப்ளஸிஸ் தொடங்கினர். இருவரும் முதல் ஓவரில் மட்டும் நிதானமாக ஆடினர். அதன் பின்னர், விராட் கோலி அடித்து ஆட ஆரம்பித்தார். லக்னோ அணியின் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசி வந்தார். அவரை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விழி பிதுங்கி நின்றார் என்றே கூற வேண்டும். லக்னோ அணி எவ்வளவோ முயற்சி செய்தும் விராட் கோலியின் ருத்ரதாண்டவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பெங்களூரு அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்து இருந்தது.
பவர்ப்ளேவிற்கு பின்னர் பெங்களூருவின் அதிரடி ஆட்டம் கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் கிடைத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி வந்தனர். விராட் கோலின் தனது அரைசதத்தினை பந்தில் எட்டி அதிரடியாக ஆடி வந்தார். இறுதியில் அதிரடியாக ஆடிவந்த விராட் கோலி 44 பந்தில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை அமித் மிஸ்ரா பந்து வீச்சில் பறிகொடுத்தார். பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் களத்திற்கு வந்த மேக்ஸ் வெல் டூ ப்ளஸியுடன் இணைந்து வான வேடிக்கை காட்டினார். இவர்களது பார்ட்னர்ஷிப்பையும் லக்னோ அணியால் பிரிக்க முடியவில்லை. இதனால் பெங்களூரு அணியின் ரன்ரேட் அதிகமாகிக் கொண்டே இருந்தது. 15வது ஓவரில் டூ ப்ளஸி இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர் 115 மீட்டருக்கு விளாசப்பட்டது. இந்த தொடரில் இதுவரை அடிக்கப்பட்ட சிக்ஸர்களில் இதுதான் அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸர் ஆகும்.
தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த பெங்களூரு அணி சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விரட்டி வந்தனர். அதிரடியாக ஆடி வந்த மெக்ஸ் வெல் 24 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். மேக்ஸ் வெல் மற்றும் டூ ப்ளஸி பார்ட்னர்ஷிப்பில் 44 பந்தில் 100 ரன்களை எட்டினர். 19 ஓவரில் பெங்களூரு அணி 203 ரன்களை எட்டி இருந்தது. இறுதியில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 212 ரன்கள் சேர்த்து இருந்தது. லக்னோ அணி சார்பில் அமித் மிஸ்ரா மற்றும் மார்க் வுட் தலா ஒரு விக்கெட் எடுத்து இருந்தனர். இறுதி வரை களத்தில் இருந்த டூ ப்ளஸி 46 பந்தில் 79 ரன்கள் எடுத்து இருந்தார்.