Nicholas Pooran: "15 பந்துகளில் அதிவேக அரைசதம்" - லக்னோ வீரர் நிகோலஸ் பூரன் படைத்த அதிரடி சாதனை
ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை லக்னோ வீரர் நிகோலஸ் பூரான் பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை லக்னோ வீரர் நிகோலஸ் பூரான் பெற்றுள்ளார். அதன்படி, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 15 பந்துகளில் அவர் அரைசதம் விளாசினார்.
15 பந்துகளில் அரைசதம்:
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர் ரகானே வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதுதான் நடப்பு தொடரில் அதிவேகமாக அடிக்கப்பட்ட அரைசதமாக இருந்தது. ஆனால், வெறும் 15 பந்துகளிலேயே அரைசதம் விளாசி முந்தைய சாதனையை தகர்த்துள்ளார் லக்னோ அணியின் நிகோலஸ் பூரான். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் இந்த சாதனையை தகர்த்துள்ளார்.
அதிரடி காட்டிய பூரான்:
213 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு, அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ் 30 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். ஆனால், இலக்கு பெரிது என்பதால் அதுவும் போதாமல், லக்னோ அணி ஒரு கட்டத்தில் 45 பந்துகளுக்கு 95 ரன் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது அடிக்க தொடங்கிய பூரான் தொட்ட பந்தெல்லாம் பவுண்டரிக்கு வெளியே. போக தொடங்கியது வெறும் 15 பந்துகளில் 50 ரன்களை எட்டி நடப்பு சீசனின் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் போட்டியில் மொத்தமாக 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பந்துகளை பவுண்டரிக்கு வெளியே அனுப்பியுள்ளார். அதில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். 326 ஸ்ட்ரைக் ரேட்டில் வீடியோ கேம் போன்ற இன்னிங்ஸை ஆடி வெற்றியை லக்னோ அணிக்கு சாதகமாக மாற்றியுள்ளார்.
வரலாற்றில் பூரான்:
15 பந்துகளில் நிகோலஸ் பூரான் பூர்த்தி செய்த இந்த அரைசதமானது, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட ஐந்தாவது அரைசதம் ஆகும். இந்த பட்டியலில் கடந்த 2018ம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் விளாசி கே.எல். ராகுல் முதலிடம் வகிக்கிறார். அவரை தொடர்ந்து 14 பந்துகளில் அரைசதம் விளாசிய பாட் கம்மின்ஸ், தலா 15 பந்துகளில் அரைசதம் விளாசிய யூசப் பதான் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்த பூரான், அந்த சாதனையை நடப்பாண்டில் அவர் தகர்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பூரான்:
அதிரடி ஆட்டக்காரரான பூரான் ஐபிஎல் தொடரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். முதல் 3 சீசன்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த பூரான், 2022ம் ஆண்டு 10.75 கோடி ரூபாய்க்கு ஐதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்திற்கு முன்பாக அவர் விடுவிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, 16 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.