Watch Video: ’வைடு, நோ-பால் நிறைய வந்தா, வேற கேப்டனுக்கு கீழதான் ஆடணும்…’ சிரித்தபடி எச்சரித்த தோனி..!
தீபக் சாஹர் பந்துவீச்சு தாக்குதலின்போது, புதிய சீசனின் முதல் ஹோம் கேமில் மூன்று நோ-பால் மற்றும் 13 வைடுகளை வீசியதே அவரது அதிருப்திக்கு காரணம்.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயீன் அலி தங்களது பங்களிப்பால் MS தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) நேற்றைய போட்டியில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் முதல் வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சேப்பாக்கத்திற்குத் திரும்பிய தோனியின் சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரவார வரவேற்பு இருந்தது. எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 இன் 6வது போட்டி ஹை ஸ்கோரிங் போட்டியாக அமைந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி வென்றது.
#CSK bowlers today bowled 13 wides and 3 no balls against #LSG and Captain @msdhoni, in his inimitable style, had this to say. 😁😆#TATAIPL | #CSKvLSG pic.twitter.com/p6xRqaZCiK
— IndianPremierLeague (@IPL) April 3, 2023
பந்துவீச்சில் மகிழ்ச்சி இல்லை
புதிய சீசனில் CSK இன் முதல் வெற்றியைக் குறித்து பேசியபோது, அணியின் பந்துவீச்சு செயல்திறனில் தோனி முழுமையாக மகிழ்ச்சியடையாததை வெளிப்படுத்தினார். அதோடு தோனி சென்னை பந்துவீச்சாளர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்தார். எல்எஸ்ஜிக்கு எதிரான சிஎஸ்கேயின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு தனது நேர்மையான ஒப்புதலைப் பகிர்ந்து கொண்ட தோனி, சேப்பாக்கத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதிலும், தனது பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
நோ-பால், வைடுகள் அதிகம்
தீபக் சாஹர் பந்துவீச்சு தாக்குதலின்போது, புதிய சீசனின் முதல் ஹோம் கேமில் மூன்று நோ-பால் மற்றும் 13 வைடுகளை வீசியதே அவரது அதிருப்திக்கு காரணம். "நோ-பால் வீசவே கூடாது, மற்றும் வைடுகள் குறைவாக வீச வேண்டும். நாம் அதிக கூடுதல் பந்துகளை வீசுகிறோம், அவற்றைக் குறைக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் வேறு புதிய கேப்டனின் கீழ்தான் விளையாட வேண்டும்," என்று போட்டிக்குப் பிந்தைய விளக்கக்காட்சியில் தோனி எச்சரித்தார். சென்னையில் ஆடியது குறித்து பேசிய அவர், "இது ஒரு பயங்கரமான ஆட்டம், அதிக ரன்கள் எடுத்த ஆட்டம். விக்கெட் எப்படி இருக்கும் என்று நாங்கள் அனைவரும் யோசித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ஒட்டுமொத்தமாக இது ஒரு சரியான முதல் ஆட்டம் என்று நினைக்கிறேன்", என்றார்.
பேட்டிங் பிட்சாக இருந்தது ஆச்சர்யம்
"பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்று நினைத்தேன். ரன்கள் குவிக்கக்கூடிய விக்கெட்தான், ஆனால் ஒட்டுமொத்தமாக கொஞ்சம் மெதுவாக இருந்தது. இங்கு அடுத்த ஆறு ஆட்டங்கள் எப்படி போகிறது என பார்க்க வேண்டும், ஆனால் நாங்கள் இங்கே வெற்றிகளை குவிக்க முடியும் என்று நம்புகிறோம்" என்று தோனி கூறினார். எல்எஸ்ஜிக்கு எதிரான சிஎஸ்கேயின் வெற்றியில் சிறிய கேமியோவில் விளையாடிய தோனி, கடைசி ஓவரில் மார்க் வுட்டிற்கு எதிராக களமிறங்கிய உடனேயே முதல் மற்றும் இரண்டாவது பந்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து, அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உலகின் பணக்கார டி20 லீக்கான ஐபிஎல்-இல் இதன்மூலம் மேலும் சில சாதனைகளை படைத்துள்ளார். 41 வயதான அவர் ஐபிஎல் வரலாற்றில் 5,000 ரன்களை கடந்த ஏழாவது பேட்டர் ஆனார். நான்கு முறை ஐபிஎல்-ஐ வென்ற கேப்டன் 236 போட்டிகளில் 5,004 ரன்கள் குவித்துள்ளார்.