Du Plessis IPL Record: கோலியின் சாதனையை தகர்த்த டூப்ளெசிஸ்..! புதிய வரலாறு படைத்த எல்லைச்சாமி..!
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கேப்டன் டூப்ளெசிஸ் நான்காயிரம் ரன்களை கடந்து, புதிய மைல்கல்லை எட்டி கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கேப்டன் டூப்ளெசிஸ் நான்காயிரம் ரன்களை கடந்து, புதிய மைல்கல்லை எட்டி கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
4000 ரன்களை கடந்த டூப்ளெசிஸ்:
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், பெங்களூரு கேப்டன் டூப்ளெசிஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 44 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4000 ரன்களை கடந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே நாளில் பல சாதனைகளை படைத்துள்ளார் டூப்ளெசிஸ்.
அதிவேகமாக 4000 ரன்கள்:
4000 ரன்களை சேர்த்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார். அதன்படி, கோலி 128 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் டூப்ளெசிஸ் வெறும் 121 போட்டிகளிலேயே அந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் கே.எல். ராகுல் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இவர் வெறும் 105 போட்டிகளில் 4000 ரன்களை கடந்துள்ளார். ஐபிஎல் தொடரில் 4000 ரன்களை கடந்த 15வது வீரர் டூப்ளெசிஸ்.
01. கே. எல். ராகுல் - 105 போட்டிகள்
02. க்றிஸ் கெயில் - 112 போட்டிகள்
03. டேவிட் வார்னர் - 114 போட்டிகள்
04. டூப்ளெசிஸ் - 121 போட்டிகள்
05. விராட் கோலி - 128 போட்டிகள்
4வது வெளிநாட்டு வீரர்:
ஐபிஎல் வரலாற்றில் நான்காயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் எனும் பெருமையையும் டூப்ளெசிஸ் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் முதல் வீரராக டேவிட் வார்னர் உள்ளார்.
01. வார்னர் - 6,265 ரன்கள்
02. டிவில்லியர்ஸ் - 5,162 ரன்கள்
03. க்றிஸ் கெயில் - 4,965 ரன்கள்
04. டூப்ளெசிஸ் - 4034 ரன்கள்
600 ரன்களை கடந்த டூப்ளெசிஸ்:
நடப்பு தொடரில் பெங்களூரு அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டூப்ளெசிஸ் அதிரடியாக ரன் குவித்து வருகிறார். 12 போட்டிகளில் விளையாடி 631 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 அரைசதங்கள் அடங்கும். இதன் மூலம் நடப்பு தொடரில் 600 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தொடர்ந்து அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்திலும் நீடித்து வருகிறார்.
புள்ளிப்பட்டியலில் பெங்களூரு:
ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் பெங்களூரு அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி வெறும் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற பெங்களூரு அணிக்கு வாய்ப்பு உள்ளது.