Kohli - Rohit : எதிர்நீச்சல் அடி.. ஃபார்முக்கு வந்து திரும்பி அடி.. கோலி-ரோகித்துக்கு ஆதரவும் விமர்சனமும்
எப்போதும் நமக்கு பிடித்த வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதை விட அவர்கள் மோசமான ஃபார்மில் இருக்கும்போதே நாம் அதிகம் ஆதரவு அளிக்க வேண்டும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இரண்டு முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் தடுமாறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 119 ரன்கள் மட்டும் அடித்துள்ளார். அத்துடன் இரண்டு முறை கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது வரை 7 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்த இரண்டு நட்சத்திர வீரர்கள் ஐபிஎல் தொடரில் சொதப்பி வருவது அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரும் சோகமாக அமைந்துள்ளது.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் 7 தோல்வியை சந்தித்துள்ளது. அதில் கூடுதலாக ரோகித் சர்மாவின் ஃபார்மும் அந்த அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. எனினும் இந்த இரண்டு வீரர்களும் ஃபார்மிற்கு வந்தால் தனி ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர்கள். ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் கோலி மற்றும் ரோகித் சர்மா பேட்டிங்கில் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறியது.
இந்தச் சூழலில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு முன்பாக இருவரும் ஃபார்மிற்கு வரவேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் ஃபார்மிற்கு திரும்புவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள் ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடும் பட்சத்தில் மீண்டும் ஃபார்மிற்கு திரும்புவார்கள் என்று அவர்கள் கூறி வருகின்றனர். எப்போதும் நமக்கு பிடித்த வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது விட அவர்கள் மோசமான ஃபார்மில் இருக்கும் போதே நாம் அதிகம் ஆதரவு அளிக்க வேண்டும். அது அவர்களுக்கு நல்ல துண்டுகோளாக அமையும். ஆகவே விரைவில் இருவரும் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி ரன் வேட்டையில் ஈடுபடுவார்கள் என்று நம்புவோம். கிரிக்கெட் விளையாட்டில் எப்போதும் ஒரு கூற்று உண்டு ‘Form is Temporary; Class is permanent’ என்பது தான் அது. இந்த இரண்டு கிளாஸான வீரர்கள் விரைவில் அதிரடி காட்டுவார்கள் என்று நம்புவோம்.