IPL 2022, SRH vs KKR : கொல்கத்தா மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா..? வெற்றியைத் தொடருமா ஹைதராபாத்..?
SRH vs KKR : கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு நேருக்கு நேர் மோதுகின்றன.
ஐ.பி.எல். தொடரின் 25வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. சென்னை அணிக்கு எதிராக தனது முதல் வெற்றிப்பயணத்தை தொடங்கிய ஹைதராபாத் கடந்த போட்டியிலும் தனது வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா அணி 5 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் 2வது இடத்தில் புள்ளிப்பட்டியலில் உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும். கடைசியாக ஆடிய இரு போட்டிகளிலும் ஹைதராபாத் அணி உத்வேகத்துடன் இருக்கும். அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன், இளம் வீரர் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆகியோர் பேட்டிங்கிற்கு பக்கபலமாக உள்ளனர். கடைசி வரிசையில் அதிரடி காட்ட நிகோலஸ் பூரண் உள்ளார். பந்துவீச்சில் அசத்த புவனேஸ்குமார், நடராஜன் ஆகியோர் உள்ளனர்.
கொல்கத்தா அணி கடந்த போட்டியில் டெல்லியிடம் போராடி தோற்றது. இதனால், மீண்டும் தனது வெற்றிப்பயணத்தை தொடங்க கொல்கத்தா முயற்சிக்கும். கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் அய்யரும், ரஹானேவும் மிகப்பெரிய தொடக்கத்தை அளித்தால் அந்த அணி இமாலய இலக்கை எட்டும். அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் சிறந்த பேட்டிங் பார்மில் உள்ளார்.
அவருடன் நிதிஷ் ராணாவும், ரஸலும் பேட்டிங்கில் ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ் அதிரடி காட்டினால் கொல்கத்தா ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர வாய்ப்புள்ளது. சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சுழலில் அசத்த காத்துள்ளனர். ரஹானேவிற்கு பதிலாக ஆரோன் பிஞ்ச் இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 21 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 7 போட்டிகளில் ஹைதராபாத் அணியும், 14 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 209 ரன்களையும், கொல்கத்தா அதிகபட்சமாக 187 ரன்களையும் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக கொல்கத்தா 101 ரன்களையும், ஹைதராபாத் குறைந்தபட்சமாக 115 ரன்களையும் எடுத்துள்ளது.
இரு அணிகளிலும் அதிகபட்சமாக வார்னர் ஹைதராபாத் அணிக்காக ஆடியபோது 619 ரன்களை குவித்துள்ளார். இரு அணிகளுக்கும் நடைபெற்ற கடைசி 5 போட்டிகளில் கொல்கத்தா 4 போட்டிகளிலும், ஹைதராபாத் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இந்த போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்