RCB vs RR: ‛அதெல்லாம் கண் முன்னாடி வந்து போகுமா இல்லையா...’ பெங்களூரு செய்த சம்பவத்திற்கு பதிலடி தருமா ராஜஸ்தான்!
ஐபிஎல் வரலாற்றில், இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகளில், பெங்களூரு அணி 11 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2021 ஐபிஎல் தொடரின் 43-வது போட்டியில், கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் துபாய் மைதானத்தில் இன்று மோத உள்ளன. தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும், ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோத உள்ளன.
நடப்பு சீசனின் இரண்டாம் பாதி போட்டிகள் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, இரண்டில் தோல்வியைத் தழுவி மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் ப்ளே ஆஃப் ரேஸில் களம் கண்டுள்ளது. இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூருவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு அதிகமாகும்.
ராஜஸ்தானைப் பொருத்தவரை, இந்த சீசனின் இரண்டாம் பாதியில் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய ராஜஸ்தானுக்கு அடுத்த இரண்டு போட்டிகள் கைகொடுக்கவில்லை. புள்ளிப்பட்டியலில் பின் தங்கி இருப்பதால், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும்.
This is what the Points Table looks like after Match 42 of #VIVOIPL. 🔽 #MIvPBKS pic.twitter.com/JGWUyjqXbW
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
இதுவரை நேருக்கு நேர்
இந்த சீசனில் இதற்கு முன் இரு அணிகளும் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து சேஸிங் களமிறங்கிய பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய படிக்கல் (101*), கோலி (72*) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐபிஎல் வரலாற்றில், இதுவரை 24 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளனர். இதில், பெங்களூரு அணி 11 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவு எட்டப்படாமல் அல்லது விளையாடாமல் முடிக்கப்பட்டது. 2020 சீசனின்போது துபாய் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது.