SRH vs LSG Innings Highlights: லக்னோவை மீட்ட நிக்கோலஸ் பூரன் - ஆயுஷ் படோனி; ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 165 ரன்கள் எடுத்துள்ளது.
ஹைதராபாத் - லக்னோ:
ஐ.பி.எல் சீசன் 17ல் 57 வது லீக் போட்டி இன்று (மே8) நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் களம் இறங்கினார்கள்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு:
இதில் குயின்டன் டி காக் 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 2 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் கே.எல்.ராகுல் உடன் மார்கஸ் ஸ்டோனிஸ் களம் இறங்கினார். இவரும் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க 21 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி திணறியது. அடுத்ததாக க்ருணால் பாண்டியா ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இவர்களது ஜோடி ஓரளவிற்கு ரன்களை சேர்த்து கொடுத்தது. அப்போது கே.எல்.ராகுல் விக்கெட்டானார்.
166 ரன்கள் இலக்கு:
மொத்தம் 33 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என மொத்தம் 29 ரன்கள் எடுத்தார். இதனிடையே க்ருணால் இரண்டு சிக்ஸரை பறக்கவிட்டார். அந்தவகையில் 21 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 சிக்ஸர் உட்பட மொத்தம் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரானுடன் ஜோடி சேர்ந்தார் ஆயுஷ் படோனி. இவர்களது ஜோடி அதிரடியாக விளையாடி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரன்களை சேர்த்து கொடுத்தது. இதனிடையே ஆயூஷ் படோனி தன்னுடைய அரைசத்தை பதிவு செய்தார். 28 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார் அவர். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது.