Highest Score in IPL History: அம்மாடியோவ்! 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
Highest Score in IPL History: ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
இந்த சீசனின் 8வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி மார்ச் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் பெங்களூரு அணியின் சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரு அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்ததிருந்தது. இதுவே கடந்த 12 ஆண்டுகளாக சாதனையாக இருந்தது. அதனை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது.
இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில்9 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர் விளாசி 62 ரன்கள் குவித்தார். இவர் 18 பந்துகளில் தனது அரைசததினை பூர்த்தி செய்தார். அதேபோல், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிவேகமான அரைசதத்தினை பூர்த்தி செய்தார். இவர் 23 பந்தில் 3 பவுண்டரி 7 சிக்ஸர் விளாசி 63 ரன்கள் குவித்தார்.
அதன் பின்னர் வந்த மார்க்ரம் 28 பந்தில் 42 ரன்கள் குவித்திருந்தார். இவர் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசியிருந்தார். அதேபோல், அதிரடி ஆட்டக்காரர் ஹென்றிச் க்ளாசன் களமிறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவர் 34 பந்துகளை மட்டும் எதிர் கொண்டு நான்கு பவுண்டரிகளும் ஏழு சிக்ஸர்களும் விளாசி 80 ரன்கள் குவித்தார். இதனால் ஹைதராபாத் அணி 277 ரன்களைக் குவித்தது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18 சிக்ஸர்களும் 19 பவுண்டரிகளும் விளாசியிருந்தது.
277 ரன்களை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 246 ரன்கள் சேர்த்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.