GT vs SRH IPL 2023: பிளே ஆஃப் சுற்றில் நுழையுமா குஜராத்?.. டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங்
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 61 லீக் போட்டிகள் முடிந்த பிறகும் இதுவரை எந்தவொரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. முன்னணியில் இருந்த குஜராத் மற்றும் சென்னை அணிகள் கூட தோல்வியை சந்தித்து தனக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குஜராத் - ஐதராபாத் மோதல்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற, ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.
குஜராத் அணி நிலவரம்:
நடப்பு சாம்பியனான குஜராத் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக குஜராத் இருக்கும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரியான கலவையாக உள்ள இந்த அணி, எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. சுப்மன் கில், பாண்ட்யா, டேவிட் மில்லர், ரஷித் கான் போன்ற பல மேட்ச் வின்னர்கள் இருப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. இருப்பினும் கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக தோல்வியுற்றது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப குஜராத் அணி ஆர்வம் காட்டி வருகிறது.
ஐதராபாத் அணி நிலவரம்:
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியோ 11 போட்டிகளில் விளையாடி, வெறும் நான்கில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஐதராபாத் அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதன் காரணமாக வாழ்வா, சாவா எனும் சூழலில் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. அதேநேரம், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எந்தவொரு வீரரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது, அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
நரேந்திர மோடி ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளும் ரன் குவிக்க அதிக வாய்ப்புண்டு.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளன. இதில் ஒரு போட்டியில் குஜராத் அணியும் ஒரு போட்டியில் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன. முதல் போட்டியில் ஐதராபாத் அணியும், இரண்டாவது போட்டியில் குஜராத் அணியும் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறை ஆகும்.