CSK vs PBKS : 180 ரன்களை குவித்தது பஞ்சாப்..! முதல் வெற்றியை பெறுமா சென்னை..!
Chennai Super Kings vs Punjab Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மும்பை, ப்ராபோர்ன் மைதானத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங்கைத் தொடங்கிய பஞ்சாபிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.
ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலே பவுண்டரி அடித்த மயங்க் அகர்வால் அடுத்த பந்திலே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய பனுகா ராஜபக்சே அதிரடியாக ஆடினார். அவர் 5 பந்தில் 1 சிக்ஸருடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரன் அவுட்டானர். இதனால், 2 ஓவர்களுக்குள் பஞ்சாப் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் – லியாம் லிவிங்ஸ்டன் கூட்டணியில் லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆட தவான் நிதானமாக ஆடினார். லிவிங்ஸ்டன் அதிரடியால் பஞ்சாப் அணி 5 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. லிவிங்ஸ்டன் மைதானத்தில் நாலாபுறமும் பவுண்டரியையும், சிக்ஸரையும் விளாசினார். அவருக்கு ஷிகர் தவானும் நல்ல ஒத்துழைப்பு அளிக்க பஞ்சாப் 10வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. லியாம் லிவிங்ஸ்டனும் அரைசதம் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 109 ரன்களாக உயர்ந்தபோது ஷிகர் தவான் 24 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் லிவிங்ஸ்டனும் ஜடேஜா சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாரூக்கான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பெங்களூருக்கு எதிராக அதிரடி காட்டிய ஓடீன் ஸ்மித்தும் 3 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி கட்டத்தில் ரபாடாவும், ராகுல் சாஹரும் ரன்கள் சேர்த்தனர். கடைசியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், சென்னைக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கிறிஸ் ஜோர்டன், ப்ரட்டொரியஸ் தலா 2 விக்கெட்டுகுளை கைப்பற்றினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்