MS Dhoni: ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு...தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!
கிரிக்கெட் ஜாம்பவான் மஹேந்திர சிங் தோனி ஐ.பி.எல் தொடரில் இணைந்து இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஐ.பி.எல் தொடர்:
பி.சி.சி.ஐ இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை தொடங்கலாம் என்ற முடிவை எடுத்த போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான வேலையைத் தொடங்கியது. அந்த நேரத்தில் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற 8 அணிகளும் தங்களுக்கென ஒரு பிரதான வீரரை ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம். இப்படி எடுக்கப்படும் வீரருக்கு ஏலத்தில் அந்த அணி அதிக விலை கொடுத்து எடுக்கும் வீரரை விட 15% தொகையை அதிகமாக வைத்து ஊதியம் கொடுக்க வேண்டும்.
மொத்தமாக ஒரு அணி 5 மில்லியன் டாலர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான் அப்போதைய விதி. அந்த நேரத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் ரசிகர்களுடன் தாங்கள் அணிக்காக எடுக்கும் வீரர்கள் நெருக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் மாநில வீரர்களை எடுக்கவே முனைப்பு காட்டின. அந்த வகையில் இந்திய அணியின் ஜாம்பவனாகவும் மும்பையைச் சேர்ந்தவருமான சச்சின் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல் ராகுல் ட்ராவிட்டை பெங்களூரு அணியும் ஏலத்தில் எடுத்தன. ஆனால், இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி சார்ந்த மாநிலங்களில் எந்த ஒரு ஐபிஎல் அணியும் இல்லை.
ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு செய்த தோனி:
2008 ஆம் ஆண்டு இதேநாளில் ஏலம் தொடங்கியது. இதில் நட்சத்திர வீரரான எம்.எஸ்.தோனியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஏலத்தில் பங்கேற்ற அணிகள் அனைத்தும் தோனியை எடுப்பதற்கு முனைப்பு காட்டின. இச்சூழலில் உச்சபட்சமாக சென்னை அணி தோனிக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டது. இவ்வறாக சென்னை அணிக்காக எம்.எஸ்.தோனி ஏலத்தில் எடுக்கப்பட்டார். 16 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது.
அன்றில் இருந்து இன்று வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார் தோனி. இடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை காரணமாக இரண்டு ஆண்டுகள் தோனி வேறொரு அணிக்காக விளையாடினார். அதே நேரம் தான் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐ.பி.எல்.கோப்பையை வென்றும் கொடுத்திருக்கும் தோனி ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க: WPL 2024: தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம்...இந்த முறை பாருங்கள்; ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடி!
மேலும் படிக்க: Jasprit Bumrah: ராஞ்சி டெஸ்ட்டில் பும்ராவிற்கு ஓய்வா? அப்போ இந்திய பவுலிங்கின் நிலைமை? ப்ளான் என்ன?