Jasprit Bumrah: ராஞ்சி டெஸ்ட்டில் பும்ராவிற்கு ஓய்வா? அப்போ இந்திய பவுலிங்கின் நிலைமை? ப்ளான் என்ன?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் 3 போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 4வது டெஸ்ட் ராஞ்சியில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
பும்ராவிற்கு ஓய்வா?
இந்த தொடரில் விராட்கோலி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ள நிலையில், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியிருப்பதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ராஞ்சியில் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசியுள்ள பும்ராவிற்கு ஓய்வு அளிப்பது அணிக்கு பின்னடைவு என்றாலும், அவருக்கு ஓய்வு அளிப்பது அவசியம் என்றும் கருதப்படுகிறது.
மீண்டும் வரும் கே.எல்.ராகுல்?
இந்திய அணியில் ஏற்கனவே முகமது ஷமி இல்லாததால் அடுத்த டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு பதிலாக களமிறங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அல்லது ரஞ்சி கிரிக்கெட்டிற்கு அனுப்பப்பட்ட முகேஷ்குமார் இருவரில் ஒருவர் களமிறங்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேபோல, கடந்த டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய கே.எல்.ராகுல், அடுத்த டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுல் களமிறங்கினால் இளம் வீரர் ரஜத் படிதார் நீக்கப்படுவார் என்று கருதப்படுகிறது. ரஜத் படிதார் தனக்கு கிடைத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். அதேபோல, இந்த தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கே.எஸ்.பரத் சரியாக பயன்படுத்தாததால் கடந்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக துருவ் ஜோயல் விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டார்.
இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும்போது பலவீனமாகவே உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் கேப்டன் ரோகித் சர்மா தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இளம் வீரர்கள் ஆவார். ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரஜத் படிதார் ஆகிய வீரர்களை கொண்டு இந்திய அணி ஆடி வருகிறது. இவர்களுடன் ஜடேஜா, அஸ்வின், சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரின் அனுபவத்தை கொண்டு இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
மேலும் படிக்க: WPL 2024: தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம்...இந்த முறை பாருங்கள்; ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடி!
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் அதிக ரன்களை குவித்த முதல் வீரர்.. ரன் மிஷின் விராட் கோலியின் சாதனை!