IPL 2021 Suspended: "கொஞ்சம் உற்சாகத்தை ஏற்படுத்த முயற்சி செய்தோம்" - பாதுகாப்பை கருதி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் - BCCI
2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது முதல் ரத்து செய்யப்பட்டதே இல்லை என்கின்ற ஐபிஎல் வரலாறு, 14-வது சீசனுடன் நிறைவடைந்துள்ளது, அதே நேரம் பெருந்தொற்று அபாய காலத்தில் ஐபிஎல் தேவையா என்ற கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இன்றி பாதுகாப்பான பயோ பபுள் சூழலில் போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் பூட்டிய மைதானத்துக்கு உள்ளேயும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று காலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை திட்டமிடப்பட்டிருந்த கொல்கத்தா vs பெங்களூரு அணிகள் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.. அடுத்த சில மணி நேரங்களிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, பேருந்து கிளீனர் ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட முடிவுகள் வந்தன. இதனால் சென்னை அணி வீரர்கள் வலைப்பயிற்சியை தவிர்த்துவிட்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். மேலும் டெல்லி கிரிக்கெட் சங்க மைதானத்தை சேர்ந்த ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற கடைசி போட்டியின்போது இவர்கள் அனைவருமே பணியில் இருந்துள்ளதும் பிசிசிஐ காதுகளை எட்டியது.
இந்நிலையில் இன்று டெல்லி அணியின் சுழல்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விரித்திமான் சாஹா ஆகியோருக்கும் கொரோனா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், டெல்லி மட்டும் ஹைதராபாத் அணி வீரர்களும் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் விதிமுறைகளின்படி கொரோனா நோய்தொற்று ஏற்படும் நபர் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 3 முறை ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் நெகட்டிவ் என வந்த பின்பே மீண்டும் களத்திற்கு திரும்பமுடியும். இந்நிலையில் சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் ஆகிய அணிகளால் குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க முடியாது, ஆக போட்டிபோட ஐபிஎல்-லில் அணிகள் இல்லை. மேலும் தற்போது மிக பாதுகாப்பான சூழலில் நடத்தப்படுவதாக சொல்லப்பட்ட டெல்லி, அகமதாபாத் பூட்டிய மைதானத்திற்கு உள்ளேயும் பாதிப்பை தடுக்கமுடியவில்லை, ஆக போட்டியை நடத்த பாதுகாப்பான மைதானமும் இல்லை.
ஆகவே இந்திய கிரிக்கெட் வாரியம் முதல்முறையாக தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. ஐபிஎல் தொடரில் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், தேதிகள் குறிப்பிடப்படாமல் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் இருப்பதால், 2021 ஐபிஎல் தொடர் இனி தொடங்கி வேறொரு காலகட்டத்தில் நடத்தப்படுவதற்கான சூழல் என்பது மிகக்குறைவே.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள "இந்திய கிரிக்கெட் வாரியம், நிலைமையை முன்னிட்டு மேற்கொண்ட அவசர ஆலோசனையில் ஐபிஎல் 2021 தொடரை உடனடியாக ஒத்திவைப்பதாக முடிவு செய்துள்ளோம். இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மற்றும் ஐபிஎல் ஏற்பாட்டு குழுவின் பாதுகாப்பில் சமரசம் செய்யாது. பாதுகாப்பு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
UPDATE: The Indian Premier League Governing Council (IPL GC) and Board of Control for Cricket in India (BCCI) in an emergency meeting has unanimously decided to postpone IPL 2021 season with immediate effect.
— IndianPremierLeague (@IPL) May 4, 2021
Details - https://t.co/OgYXPj9FQy pic.twitter.com/lYmjBId8gL
மேலும் "இந்தியாவில் இது ஒரு கடினமான காலகட்டம், இந்த தருணத்தில் சிறிது உற்சாகத்தை ஏற்படுத்த முயற்சித்தோம், ஏனினும் தற்போது ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அனைவரையும் தங்கள் குடும்பத்துடனும், பிரியமானவர்களுடன் இருக்க அனுப்புகிறோம். அனைவரும் பாதுகாப்பாக சென்றடைய இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து விதமான விஷயங்களையும் தனது அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளும்" என தெரிவித்துள்ளது. அனைத்து சுகாதார ஊழியர்கள், கிரிக்கெட் சங்கங்கள், வீரர்கள், நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், பங்குதாரர்கள் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது. ஆகவே 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது முதல் ரத்து செய்யப்பட்டதே இல்லை என்கின்ற ஐபிஎல் வரலாறு, 14-வது சீசனுடன் நிறைவடைந்துள்ளது, அதே நேரம் பெருந்தொற்று அபாய காலத்தில் ஐபிஎல் தேவையா என்ற கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.